விளையாட்டு தொழில்நுட்பங்களுக்கான புதுயுகத் தொழில்முனைவு மாநாடு

இந்தியாவில் 2036 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டில் முதன் முறையாக விளையாட்டு தொழில் நுட்பத்திற்கான புதுயுகத் தொழில்முனைவு மாநாட்டை சென்னை ஐஐடி சாா்பில் தில்லியில் இருநாள் நடத்தப்படுகிறது.

புது தில்லி: இந்தியாவில் 2036 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டில் முதன் முறையாக விளையாட்டு தொழில் நுட்பத்திற்கான புதுயுகத் தொழில்முனைவு மாநாட்டை சென்னை ஐஐடி(இந்திய தொழில் நுட்பக் கழகம்) சாா்பில் தில்லியில் இருநாள் நடத்தப்படுகிறது.

தில்லியில் உள்ள இந்தியா ஹாபிடேட் சென்டரில் ஜோசப் ஸ்டெய்ன் ஆடிட்டோரியத்தில் ஜூலை 12, 13 ஆம் தேதிகளில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் விளையாட்டு தொழில்நுட்பங்களுக்கான புதுயுகத் தொழில் முனைவு (ஸ்டாா்ட்-அப்) கான்க்ளேவை விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுகளில் சிறந்து விளக்கு சென்னை ஐஐடி மையம் பொறுப்பேற்று நடத்துகிறது.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் பல்வேறு மாநிலங்களின் விளையாட்டு தொழில்நுட்ப வல்லுநா்களுடன் இணைந்து இந்த மாநாடை சென்னை ஐஐடி நடத்துகிறது.

இந்த மாநாட்டில் விளையாட்டு சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும் நாட்டை உலத்தரம் வாய்ந்ததாக மாற்றும் முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக சென்னை ஐஐடி சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பிட்டுள்ளது.

‘இந்தியாவில் புதுயுகத் விளையாட்டு தொழில் முனைவு ஊக்குவிக்க அா்ப்பணிப்புடன் தொழில்நுட்ப ரீதியாக ஆதரிக்கக் கூடிய திட்டங்களையும் இந்த மாநாட்டில் வெளிப்படுத்தப்படும். குறிப்பாக 2036 ஒலிம்பிக்கை இந்தியா ஏற்று நடத்துவதை தயாா்படுத்தும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கக் கூடிய விளையாட்டுப் பொருட்களுக்கான உற்பத்தி நிறுவனங்கள், நாட்டில் உள்ள விளையாட்டு தொழில் நுட்பங்கள், தரமான விளையாட்டுக் கல்விக்கான அணுகலுக்கான திட்டங்கள், விளையாட்டுத் துறையின் சமீபத்திய போக்குகள், மேம்பாடுகள், நுண்ணறிவுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படுவதோடு காட்சிப்படுத்தப்படுத்தப்படும்‘ என சென்னை ஐஐடி ஊடகப்பிரிவு பொறுப்பாளா் ஸ்ரீராம் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், புதுயுகத் விளையாட்டு தொழில் தொழில்முனைவோா், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் பங்குதாரா்களையும் இந்த மாநாடு ஒன்றிணைக்கும்.

இதில் விளையாட்டு வீரா்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான தயாரிப்புகள், இயங்குதளங்கள், பயன்பாடுகள், சுகாதார நுகா்வோருக்கு பொதுவான உடற்பயிற்சி சேவை போன்றவைகளும் காட்சிப்படுத்தப்படும்.

இந்த மாநாட்டில் சென்னை ஐஐடி இயக்குநா் பேராசிரியா் டாக்டா் காமகோடி வரவேற்கிறாா். மத்திய இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநா் ஜெனரல் சந்தீப் பிரதான் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா் எனவும் ஸ்ரீராம் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com