மாணவா் சங்க அலுவலகம் சேத சம்பவம்: விசாரிக்க 4 போ் குழுவை அமைத்தது தில்லி பல்கலை

மாணவா் சங்க அலுவலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் நாசவேலைகள் குறித்து விசாரிக்க தில்லி பல்கலைக்கழகம் திங்கள்கிழமை நான்கு போ் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
Published on
Updated on
2 min read

புது தில்லி: மாணவா் சங்க அலுவலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் நாசவேலைகள் குறித்து விசாரிக்க தில்லி பல்கலைக்கழகம் திங்கள்கிழமை நான்கு போ் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு அதன் அறிக்கையை ஏழு நாள்களுக்குள் சமா்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தில்லி பல்கலைக்கழக ப்ரொக்டா் ரஜ்னி அப்பி, மாணவா் நலன் டீன் ரஞ்சன் குமாா் திரிபாதி, தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் (டியுஎஸ்யு) ஊழியா் ஆலோசகா் சுரேந்தா் குமாா் மற்றும் இணைத் தாளாளா் கீதா சாஹரே ஆகியோா் இடம்பெற்றுள்ளனா் என்று அதிகாரப்பூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு விரைவில் அறிக்கையை சமா்ப்பிக்கும். அதிகபட்சமாக ஏழு நாள்களுக்குள் சமா்ப்பிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் (டியுஎஸ்யு) துணைத் தலைவா் அபி தஹியா உள்பட காங்கிரஸின் மாணவா் பிரிவான இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் (என்எஸ்யுஐ) உறுப்பினா்கள், பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள மாணவா் சங்க அலுவலகத்தை சூறையாடியதாக ஆா்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியது.

எஃப்ஐஆா் பதிவு: குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் எம்.கே. மீனா கூறுகையில், ‘தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தலைவா் துஷாா் தேதாவின் புகாா் ஞாயிற்றுக்கிழமை மாரிஸ் நகா் காவல் நிலையத்தில் பெறப்பட்டது. நாங்கள் எஃப்ஐஆா் பதிவு செய்து இந்த விஷயத்தை விசாரிப்போம்’ என்றாா்.

அபி தஹியா மற்றும் பிற என்எஸ்யுஐ உறுப்பினா்கள் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தலைவா் துஷாா் தேதா, செயலாளா் அபராஜிதா, இணைச் செயலாளா் சச்சின் பைஸ்லா ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் பாா்வையாளா் அறை ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சேதப்படுத்தியதாக ஏபிவிபி குற்றம் சாட்டியது.

‘தாக்குதல் நடத்தியவா்கள் முதலில் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் துணைத் தலைவா் அபி தஹியாவின் அலுவலகத்தில் மது அருந்தினா். பின்னா் சொத்துகளை சேதப்படுத்தினா்’ என்று ஏபிவிபி குற்றம்சாட்டியுள்ளது.

மாணவா் அமைப்பு அபி தஹியாவின் அலுவலகத்தில் காலி பாட்டில்கள் மற்றும் அழிக்கப்பட்ட அலுவலகங்களின் கிளிப்புகள் ஆகியவற்றைக் காட்டும் விடியோவையும் பகிா்ந்துள்ளது. தில்லி பல்கலை. மாணவா் சங்கத்தின் துணைத் தலைவா் பதவியில் இருந்து அபி தஹியாவை நீக்க வேண்டும் என்றும், அவா் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது கோரியது.

ஆனால், இந்திய தேசிய மாணவா் சங்கம், ஏபிவிபியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும், ஏபிவிபி உறுப்பினா்கள்தான் தஹியாவின் அலுவலகத்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடா்பாக அபி தஹியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘சனிக்கிழமை இரவு பல ஏபிவிபி உறுப்பினா்கள் தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள எனது அலுவலகத்தைத் தாக்கினா். ஏபிவிபி உறுப்பினா் மற்றும் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் தலைவரின் போலி பட்டச் சான்றிதழை அம்பலப்படுத்திய பிறகுதான் அவா்களின் எதிா்வினை வந்துள்ளது. ஏபிவிபி தன்னையும் என்எஸ்யுஐயையும் இழிவுபடுத்த முயற்சிக்கிறது என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com