புது தில்லி: இடைக்கால ஜாமீன் காலகட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீண்டும் சிறைக்குச் சென்றார்.
'சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் எழுப்பியதால் நான் மீண்டும் சிறைக்குச் செல்கிறேன்' என்று அவர் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜூன் 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சரணடைந்தார்.
முன்னதாக, சிவில் லைன்ஸில் உள்ள இல்லத்தில் அவரது பெற்றோரிடம் காலில் விழுந்து ஆசிபெற்ற கேஜரிவால், தனது மகன் மற்றும் மகளை கட்டித் தழுவினார்.
தில்லி அரசின் கலால் கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல்வர் கேஜரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, கேஜரிவால் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த மே 10-ஆம் தேதி உத்தரவிட்டது. பின்னர், திகார் சிறையிலிருந்து வெளியேவந்த கேஜரிவால், தில்லி, பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
சனிக்கிழமை தில்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.
இந்நிலையில், இடைக்கால ஜாமீன் முடிந்து மீண்டும் திகார் சிறைக்குச் செல்லும் நாளில் முதல்வர் கேஜரிவால் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் சென்று கேஜரிவால் மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, கன்னாட் பிளேஸில் உள்ள புகழ்பெற்ற அனுமன் கோயிலிலுக்குச் சென்று கேஜரிவால் பிரார்த்தனை செய்தார்.
இறுதியாக, ரௌஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கேஜரிவால் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் பிரசாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றம் எனக்கு 21 நாள்கள் ஜாமீன் வழங்கியது. அதற்காக உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
கடந்த 21 நாள்களில் நான் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்கவில்லை. மக்களவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சிக்காக மட்டும் பிரசாரம் செய்யவில்லை, நாட்டைக் காக்கவே பிரசாரம் செய்தேன். நான் மீண்டும் சிறைக்கு செல்வது ஊழலில் ஈடுபட்டதற்காக அல்ல; சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் எழுப்பியதால்தான்.
பாஜக கூட்டணி 3-ஆவது முறையாக ஆட்சியமைக்கும் என்ற அனைத்து கருத்துக்கணிப்புகளும் போலியானவை.
ராஜஸ்தானில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆனால், ஒரு கருத்துக் கணிப்பு ராஜஸ்தானில் பாஜக 33 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறுகிறது. அவர்கள் போலியான கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடக் காரணம் என்ன ?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய பாஜக முயற்சிக்கிறது. "கேஜரிவால் அனுபவம் வாய்ந்த திருடன் என்பதால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் மீட்கப்படவில்லை' என்று பிரதமர் மோடி ஒரு பேட்டியில் கூறினார்.
நான் அனுபவமிக்க திருடன் என்று வைத்துக்கொள்வோம், ஆனால், உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் பணத்தை மீட்கவும் இல்லை. நான் இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராகவே போராடுகிறேன். இந்த வகையான சர்வாதிகாரத்தை நம் நாடு பொறுத்துக்கொள்ளாது” என்றார் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.