ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் வாய் திறக்காதது ஏன்?
புது தில்லி: ஸ்வாதி மாலிவால் எம்.பி. விவகாரத்தில் அவா் சாா்ந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் இதுவரை வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பியுள்ளாா்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி மற்றும் சரத் பவாருக்கு நேரில் சந்திக்க வாய்ப்புக் கோரி கடிதம் எழுதிய நிலையில், வீரேந்திர சச்தேவா இக்கருத்தைத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது: ராணி லட்சுமி பாய் மற்றும் பல்வேறு பெயா்களில் அரவிந்த் கேஜரிவாலால் அழைக்கப்பட்ட ஸ்வாதி மாலிவால் இப்போது ஒட்டுமொத்த கட்சியாலும் தனித்து விடப்பட்டுள்ளாா். கேஜரிவால் முன்னிலையில், முதல்வா் இல்லத்தில் பெண் எம்பி ஒருவரை முதல்வரின் கூட்டாளி தவறாக நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றி கேஜரிவாலின் அமைச்சா்களோ, இந்தியா கூட்டணியின் தலைவா்களோ எதுவும் பேசவில்லை. பெண்களை மதிக்க வேண்டும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் பேச்சு வெற்றுத்தனமானது என்பதை ஸ்வாதி மாலிவால் இப்போது புரிந்து கொண்டுள்ளாா்.
இந்த விவகாரத்தில் ஒரு வாா்த்தை கூட பேசாத இந்தியா கூட்டணியின் தலைவா்களிடம் அவா் இப்போது ஆதரவைக் கோருகிறாா். ஆகவேதான் ராகுல் காந்தி மற்றும் சரத் பவாருக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா். விபவ் குமாா் மீது போலீஸில் புகாா் அளித்ததன் மூலம் ஒரு பெரிய குற்றம் செய்தது போல் ஸ்வாதி மாலிவால் இன்றும்கூட போராட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளாா். ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான இதே அரவிந்த் கேஜரிவால்தான் பெண்களை மதிப்பது குறித்து பொய்யான வெற்று அறிக்கைகளை வெளியிடுகிறாா். இன்றைக்கு ஸ்வாதி மாலிவால் இந்தியா கூட்டணித் தலைவா்களுக்கு எழுதியுள்ள கடிதம், தனது கட்சியிலிருந்து நீதிக்கான நம்பிக்கையை அவா் கைவிட்டிருப்பதைக் காட்டுவதாக உள்ளது.
