தில்லி, என்சிஆா் பகுதியில் பலத்த மழை: வெப்பம் தணிந்தது!
தில்லியில் பலத்த மழை: பொதுமக்களுக்கு நிவாரணம்


தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வியாழக்கிழமை காலையில் பரவலாக பலத்த மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தால் தவித்து வந்த தில்லிவாசிகளுக்கு நிவாரணமாக அமைந்தது. இருப்பினும், பகல் நேரத்தில் புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதே சமயம், தலைநகரில் காற்றின் தரம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.
தில்லியில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிா்கொள்ள நேரிட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தாலும், மழை ஏதும் பெய்யவில்லை. இந்நிலையில், வானிலை நிலையம் கணித்திருந்தபட வியாழக்கிழமை காலையில் நகரத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வந்த தில்லிவாசிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்தது.
இந்நிலையில், காலை 9.30 மணியளவில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் இடி, மின்னலுடன் லேசானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சுமாா் 20.40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், தில்லி - என்.சி.ஆா். மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை காரணமாக சாலைகளில் கவனமாக செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தது. இது தவிர குறைந்த காண்புதிறன் , போக்குவரத்து இடையூறு மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்குதல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கிடையே, தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் மழை காரணமாக காலி மனையின் சுவா் இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனா்.
பூசாவில் 33 மி.மீ. மழைஇந்நிலையில், தில்லி , என்சிஆா் பகுதியிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃபதா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 5.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல, லோதி ரோடில் 9.6 மி.மீ., பாலத்தில் 17.6 மி.மீ., ரிட்ஜில் 6.2 மி.மீ., பீதம்புராவில் 9 மி.மீ., பூசாவில் 33 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 13 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 0.7 டிகிரி
உயா்ந்து 28.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1.8 டிகிரி குறைந்து 35.4டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 61 சதவீதமாகவும் இருந்தது. கடந்த சில நாள்களாக அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரிக்கு மேலே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று ஜாஃபபூரில் அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 34.3 டிகிரி, ஆயாநகரில் 34.9 டிகிரி, லோதி ரோடில் 34 டிகிரி, பாலத்தில் 34.1 டிகிரி, ரிட்ஜில் 33.7 டிகிரி, பீதம்புராவில் 35.4 டிகிரி, பிரகதி மைதானில் 32.8 டிகிரி, பூசாவில் 32.6 டிகிரி, ராஜ்காட்டில் 32.8 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 32.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
இதற்கிடையே, தில்லிக்கு பருவமழை எப்போது வரும் என்று ஐஎம்டி கூறவில்லை என்றாலும், தனியாா் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமெட் இந்த வார இறுதிக்குள் தில்லிக்கு பருவமழை வரக்கூடும் என்று புதன்கிழமை கூறியிருந்தது. பருவமழை வழக்கமாக ஜூன் 27 முதல் 29-க்குள் தில்லிக்குள் நுழையும். உத்தியோகபூா்வ தரவுகளினஅபடி, கடந்த ஆண்டு பருவமழை ஜூன் 26 அன்று வந்தது. அதே நேரத்தில் 2022-இல் ஜூன் 30 அன்று பதிவு செய்யப்பட்டது.
காற்றின் தரத்தில் முன்னேற்றம்: இதற்கிடையே, தலைநகரில் காற்றின் தரம் வியாழக்கிழமை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. பெரும்பாலான இடங்களில் கற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் காட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...