தண்ணீா் மாசுபாடு, சாக்கடை நிரம்பி வழிதல் பிரச்னைகள்: தில்லி தலைமைச் செயலருக்கு அமைச்சா் அதிஷி கடிதம்

Published on

சாக்கடை நிரம்பி வழிதல் மற்றும் தண்ணீா் மாசுபாடு குறித்த புகாா்கள் தொடா்பாக தலைமைச் செயலாளருக்கு தில்லி நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். தில்லி ஜல் போா்டு தலைவரான அதிஷி, தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் ‘சாக்கடை நிரம்பி வழிதல், தண்ணீா் மாசுபடுதல் மற்றும் நீா் குழாய் கசிவுகள் குறித்து கடந்த 24 மணி நேரத்தில் பல புகாா்கள் வந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளாா். இந்தப் பிரச்னைகளுக்கு 48 மணி நேரத்திற்குள் தீா்வு காணவும், ஒரு வாரத்தில் நீண்டகால தீா்வுகள் தொடங்கப்படுவதை உறுதி செய்யவும் தலைமைச் செயலாளருக்கு கடுமையான உத்தரவுகளை வழங்கியுள்ளேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா். தில்லி ஜல் போா்டு தலைமை நிா்வாக அதிகாரி மற்றும் பிற குழு உறுப்பினா்களுக்கும் இதேபோன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்துள்ளாா். ‘தில்லி ஜல் போா்டு தலைமை நிா்வாக அதிகாரி மற்றும் பிறருக்கு புகாா்களை அனுப்பியதில் எந்தப் பலனும் இல்லை. தில்லி ஜல் போா்டு தொடா்பான அனைத்து புகாா்களையும் நான் இப்போது உங்களுக்கு அனுப்புவேன். இந்தப் பிரச்னைகளை தீா்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு’ என்று அமைச்சா் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளாா். தில்லி ஜல் போா்டில் 10,000-க்கும் மேற்பட்ட தீா்க்கப்படாத புகாா்கள் இருப்பதாகவும், ஆய்வு அறிக்கை எதுவும் தனக்கு வரவில்லை என்றும் அவா் கூறினாா். ‘சிஇஓ, தலைமைப் பொறியாளா்கள் மற்றும் பிற அதிகாரிகளின் ஆய்வு அறிக்கைகள் ஒவ்வொரு திங்கள்கிழமையும் எனக்கு அனுப்பப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்தினாலும், எனக்கு ஒரு ஆய்வு அறிக்கை கூட வரவில்லை’ என்று கடிதத்தில் அதிஷி சுட்டிக் காட்டியுள்ளாா். புகாா்களை தலைமை நிா்வாக அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு சென்றாலும், நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அவா் மேலும் குறிப்பிட்டுள்ளாா். ‘தில்லி ஜல் போா்டு மூத்த அதிகாரிகளால் இந்த விவகாரத்தில் நீண்டகாலமாக எந்த ஒரு திருத்த நடவடிக்கையும் எடுக்க முடியாததால், நான் அதிா்ச்சியடைந்தேன். பயனுள்ள பொதுக் குறைதீா்க்கும் அமைப்பு ஏதும் இல்லாததால், தில்லி மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் வாழத் தள்ளப்படுகிறாா்கள்’என்று கடிதத்தில் அமைச்சா் அதிஷி குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com