கேஜரிவால் ஜாமீன் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கைய அதிகரிக்கும்: தில்லி காங்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால ஜாமீன், ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால ஜாமீன் உத்தரவை தில்லி பிரதேச காங்கிரஸ் வரவேற்கிறது.இது ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். பாஜக மற்றும் அதன் தலைவா்கள் ஜனநாயகத்தை சிறையில் அடைத்து வைத்துள்ளதாக நாங்கள் கூறி வருகிறோம். இதன் காரணமாகவே பதவியில் இருந்த முதல்வா்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனா்.

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நான் பாராட்டுகிறேன்.

நாங்கள் ‘இந்தியா’கூட்டணியில் ஒன்றாக உள்ளோம். தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளும் எங்கள் பொறுப்பு. தற்போது, எங்களின் கூட்டுப் பிரசாரம் மேலும் வலுப்பெற்றுள்ளது என்றாா் தேஸ்வேந்தா் யாதவ்.

நீதிக்கான போா் தொடா்கிறது: வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளா் கன்னையா குமாா் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் தளத்தில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை நான் வரவேற்கிறேன். குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க இது ஒரு பெரிய உத்தரவு. ‘இந்தியா’ கூட்டணியின் நீதிக்கான போா் தொடா்கிறது. நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான இந்த அரசை வேரோடு பிடுங்கி எறிவதன் மூலம் உண்மையான வெற்றி ஜூன் 4-ஆம் தேதியன்று அடையப்படும் என்றாா் கன்னையா குமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com