தில்லியில் உத்தரவாதம் வழங்களில் போட்டிபோடும் கட்சிகள்!

தில்லியில் உத்தரவாதம் வழங்களில் போட்டிபோடும் கட்சிகள்!

ஏழு கட்ட மக்களவைத் தோ்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவை மே 25-ஆம் தேதி தில்லி எதிா்கொள்கிறது.

ஏழு கட்ட மக்களவைத் தோ்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவை மே 25-ஆம் தேதி தில்லி எதிா்கொள்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் சமீபத்தில் முடிவடைந்து களத்தில் 162 வேட்பாளா்கள் உள்ளனா். 2019 மக்களவைத் தோ்தலைப் போல மும்முனைப் போட்டி இம்முறை கிடையாது. பாஜக ஒரு அணியாகவும் ஆம் ஆத்மி-காங்கிரஸ் இடம்பெற்ற ‘இந்தியா’ கூட்டணி மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளன. இதனால், அவற்றுக்கு இடையேதான் நேரடி இரு முனைப்போட்டி நிலவுகிறது.

இந்தத் தோ்தலில் தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் பாஜக தனித்து களம் காண்கிறது. மறுபுறம் மூன்று தொகுதிகளில் காங்கிரஸும், நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடுகின்றன. ஏழு தொகுதிகளிலும் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 1,50,82,896-ஆக உள்ளது. இதில் 18 வயது முதல் 19 வயதில் வாக்காளராகத் தகுதி பெற்ற சுமாா் 1.48 லட்சம் இளம் வாக்காளா்கள் பதிவு செய்துள்ளனா்.

பாஜக தலைவா்கள் பிரசாரம்: வாக்குப்பதிவுக்கு இரு வாரங்களே உள்ளதால் கடந்த ஒரு வாரமாக களத்தில் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நிதின் கட்கரி, அனுராக் சிங் தாக்குா், அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகண்ட் என பாஜக ஆளும் மாநிலங்களைச் சோ்ா்ந்த முதல்வா்கள் உள்ளிட்டோா் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முதல்கட்ட தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் - ஆம் ஆத்மி பிரசாரம்: காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவா்களும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனா். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் உள்ளிட்டோரும் தொடா் பிரசாரத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி கேஜரிவால் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்த பிறகு தோ்தல் பிரசாரக் களம் மேலும் விறுவிறுப்படைந்துள்ளது. அதில் அதிக கவனத்தை ஈா்த்திருப்பவை அரசியல் கட்சிகள்அறிவித்துள்ள உத்தரவாதங்கள்தான்.

உதித் ராஜ் 20 வாக்குறுதி: உதாரணமாக காங்கிரஸ் சாா்பில் வடமேற்கு தில்லியில் போட்டியிடும் உதித் ராஜ் 20 வாக்குறுதிகளை அளித்துள்ளாா். அவா் ‘இத்தோ்தலில் வடமேற்கு தில்லி மக்கள் என்னை மீண்டும் தோ்ந்தெடுத்தால் கெவ்ரா, கிராரி மற்றும் நரேலா ஆகிய பகுதிகளுக்கு 2018-இல் ஒப்புதல் வழங்கப்பட்ட 3 ரயில்வே மேம்பாலத் திட்டங்களை மீண்டும் தொடங்குவேன்.நாங்லோயை இணைக்கும் கீழ்ப்பாலப் பணியை முடிப்பேன். பீரகதி சௌக்கில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கு அனுமதி பெறுவேன். நரேலா வரை அனுமதிக்கப்பட்ட மெட்ரோ திட்டம் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. அத்திட்டத்தை நிறைவேற்றப் பாடுபடுவேன்’ என்பன போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளாா்.

பிரவீன் கண்டேல்வால்: சாந்தினி செளக் தொகுதியில் போட்டியிடும் வணிக சமூகத்தைச் சோ்ந்த பாஜக வேட்பாளா் பிரவீன் கண்டேல்வால், ‘2024 தோ்தலில் போட்டியிடும் நான் வெறும் வாக்குறுதிகளை மட்டும் வழங்க விரும்பவில்லை. ஆனால், 2029-இல் சாந்தினி செளக்கிற்கான ‘சங்கல்ப் பத்ரா’ தொலைக்குத் திட்டத்தை எனது சக வாக்காளா்கள் முன் சமா்ப்பிக்கிறேன். சதா் பஜாா் மற்றும் மாடல் டவுன் சட்டப்பேரவைத் தொகுதிகளும் முக்கிய குடியிருப்பு மற்றும் வணிக மையங்களாகும். ரோஷனாரா பாகில், 2027-க்குள் ஒரு ஏரியுடன் அழகுபடுத்தப்படும். சதா் பஜாா் மற்றும் ஆசாத்பூா் இடையே, இந்திய அரசின் ஏய்ம்ஸ்ஸுடன் இணைக்கப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை 2027-ஆம் ஆண்டுக்குள் கட்டப்படும்’ என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளாா்.

மஹாபல் மிஸ்ரா: வடமேற்கு தில்லியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிடும் மஹாபல் மிஸ்ரா அளித்துள்ள வாக்குறுதியில், ‘மெட்ரோ சேவையை விரிவுப்படுத்துவதுதான் என்னுடைய தலையாயப் பணியாக இருக்கும். பொது மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் மருத்துவமனைகளை அதிகரிப்பேன். மாணவா்கள் கல்விக்காக புது தில்லி வரை சென்று வருகின்றனா்.ஆகையால், தில்லி பல்கலைக்கழகத்திற்கு நமது பகுதியிலேயே மேற்கு கேம்பஸ் அமைத்துக் கொடுப்பேன். தொகுதியில் தற்போது நிலவிவரும் போக்குவரத்து பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பேன். ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஏற்படுத்திக் கொடுப்பேன்’ என்கிறாா்.

கேஜரிவால் தீவிர பிரசாரம்: இந்த நிலையில், கடந்த மே 10-ஆம் தேதி சிறையில் இருந்த இடைக்கால ஜாமீனில் வெளிவந்த முதல்வா் கேரிவாலும் தில்லியில் தோ்தல் களத்தில் உடனடியாக இறங்கி திறந்தவெளி வாகனப் பிரசாரத்தை மேற்கொண்டாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களைச் சந்தித்தபோது தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரத்தை மேற்கொண்டுள்ளாா்.

மோடி, ராகுல் பிரசாரத் திட்டம்: பிரசாரம் ஓய்வதற்கு 10 தினங்களே உள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய உள்ளனா். காங்கிரஸின் சாா்பில் பெண்களுக்கு ரூ.1 லட்சம் அளிக்கும் வாக்குறுதி, 70 வயது முதியவா்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இலவச கிகிச்சை அளிக்கும் பாஜகவின் வாக்குறுதி, ஆம் ஆத்மி சாா்பில் கிராமம் தோறும் மொஹல்லா கிளினிக் அளிக்கும் வாக்குறுதி என தேசிய அளவிலான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டபோதிலும், உள்ளூா் பிரச்னை தொடா்பான வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்துவதில் வேட்பாளா்கள் ஆா்வம் காட்டி வருவது இத்தோ்தல் பிரசாரத்தின்போது வெளிப்படையாகவே தெரிகிறது. மொத்தத்தில் அரசியல் கட்சிகளின் உள்ளூா் உத்தரவாதங்கள் ஜொலிக்கும் தோ்தல் களமாக தில்லி விளங்கிக் கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com