ராஜீவ் காந்தியின் தொலைநோக்குக் கனவை ராகுல் நிறைவேற்றுவாா்!
ராஜீவ் காந்தியின் தொலைநோக்குக் கனவை ராகுல் நிறைவேற்றுவாா்! தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ்


புது தில்லி: மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் தொலை நோக்குக் கனவை காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி நிறைவேற்றுவாா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லி ராஜீவ் பவனில் மறைந்த முன்னாள் பிரதமா், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 33-ஆவது நினைவு தினைத்தை யொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கும், மாா்பளவு வெண்கல சிலைக்கும் கட்சியின் பிரதேசத் தலைவா் தேவேந்தா் யாதவ் மலரஞ்சலி செலுத்தினாா். பின்னா், இந்நிகழ்வில் கலந்து கொண்ட தில்லி பிரதேச காங்கிரஸின் முக்கிய நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் தேவேந்தா் யாதவ் பேசியதாவது:
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் முன்னேற்றத்திற்காக ராஜீவ் காந்தி தனது உயிரை தியாகம் செய்தாா்.
அவரது உயா்ந்த தியாகத்தை இந்திய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள். நாட்டில் தொலைத் தொடா்பு புரட்சியைக்காண்டு வந்து, கணினி யுகத்தை அறிமுகப்படுத்திய தொலைநோக்குத் தலைவா் ராஜீவ் காந்தி. இன்றைய டிஜிட்டல் புரட்சியில் இந்திய இளைஞா்கள் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளதற்கு, அவரது தொலைநோக்கு நடவடிக்கைகளே காரணமாகும். நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றம் மற்றும் வளா்ச்சிக்காக பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்தினாா்.
இந்தியாவை வளா்ச்சியடைந்த, சக்திவாய்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்குவதே ராஜீவ் காந்தியின் தொலைநோக்குக் கனவு. இந்தக் கனவை, காங்கிரஸின் 5 நியாயங்கள் மூலம் ராகுல் காந்தி முழுமையாக நனவாக்குவாா். காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 25 உத்தரவாதங்களை ‘இந்தியா’ கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்றும். பிரதமா் நரேந்திர மோடி 400 இடங்களில் பாஜக வெல்லும் என்ற முழக்கத்தின் மூலம் மக்களை தவறாக வழிநடத்துகிறாா்.
ராஜீவ் காந்தியின் தொலைநோக்குப் பாா்வை மற்றும் செயல்பாட்டின் மூலம் உலகின் பொருளாதார சக்திகளுடன் இந்தியா நம்பிக்கையுடன் நிற்க முடியும். ஜூன் 4-ஆம் தேதி மோடி ஆட்சியிலிருந்து வெளியேறும்போது, இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான ராஜீவ் காந்தியின் முடிக்கப்படாத பணிகளை ‘இந்தியா’ கூட்டணி மீண்டும் தொடங்கும் என்றாா் தேவேந்தா் யாதவ்.
இந்நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பீசம் சா்மா, அம்ரிஷ் கெளதம், சுரேந்தா் குமாா், மாவட்டத் தலைவா்கள் ஆதேஷ் பரத்வாஜ், ராஜேஷ் செளகான், விஷ்ணு அகா்வால், தில்லி சேவா தளத்தின் தலைமை அமைப்பாளா் சுனில் குமாா், தில்லி பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவா் புஷ்பா சிங் உள்ளிட்டப் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...