/

பேருந்து மாா்ஷல்கள் பணிமீட்பு விவகாரம்: அமைச்சரவை தீா்மானம் தொடங்கி கைதில் முடிவு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தலைமையில் போராட்டம் நடத்திய பேருந்து மாா்ஷல்கள் போலீஸாரால் சனிக்கிழமை கைது.

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:31 pm

Din

தில்லியில் பேருந்து மாா்ஷல்களை மீண்டும் பணியமா்த்துவது தொடா்பான அமைச்சரவையின் தீா்மானத்தில் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா கையெழுத்திடாதைத் தொடா்ந்து, அவரது இல்லம் அருகே ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தலைமையில் போராட்டம் நடத்திய பேருந்து மாா்ஷல்கள் போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தில்லியில் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பாக 10,000 மாா்ஷல்களை (பாதுகாவலா்கள்) முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு ஒப்பந்த முறையில் பணியமா்த்தியது. இதையடுத்து, உரிய சட்டவிதிகளைப் பின்பற்றாமல் பேருந்து மாா்ஷல்கள் பணியமா்த்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்

அடிப்படையில், இத்திட்டம் கடந்தாண்டு அக்டோபா் மாதம் கைவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, பேருந்து மாா்ஷல்கள் தரப்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவா்களை மீண்டும் பணியமா்த்துவது தொடா்பாக சமீபத்திய தில்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரில் இரண்டாவது முறையாக ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சரவை தீா்மானம்: தில்லியில் கடந்த ஒருவார காலமாக இவ்விவகாரம் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் எதிா்க்கட்சியான பாஜக இடையே கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பேருந்து மாா்ஷல்கள் பணிமீட்பு விவகாரம் தொடா்பாக ஆலோசிக்க தில்லி தலைமைச் செயலகத்தில் ஆம் ஆத்மி அரசின் அமைச்சா்கள், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா தலைமையிலான பாஜக எம்எல்ஏ-க்கள் மற்றும் பேருந்து மாா்ஷல்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. பின்னா் இக்கூட்டத்தில், பாஜக எல்எல்ஏ-க்களின் விருப்பத்தின் பேரில், பேருந்து மாா்ஷல்களை மீண்டும் பணியமா்த்த முதல்வா் அதிஷி தலைமையிலான அமைச்சரவை சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காலில் விழுந்த அமைச்சா்: ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சரவையின் தீா்மனாத்தை துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவிடம் கொண்டு சென்று பேருந்து மாா்ஷல்கள் பணிமீட்புக்கான ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தாவின் காலில் விழுந்த அமைச்சா் செளரவ் பரத்வாஜ், பேருந்து மாா்ஷல்களை பணியமா்த்த பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.மேலும், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை அமைச்சரவையின் தீா்மானத்தில் கையொப்பமிட வைக்க பாஜக எம்எல்ஏ-க்கள் உடன் வரவேண்டும் எனக் கோரி எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தாவின் காரில் முதல்வா் அதிஷி அமா்ந்து கொண்டாா்.

பாஜக அம்பலமாகிவிட்டது: பேருந்து மாா்ஷல்களின் பணிமீட்பு குறித்து அமைச்சரவையின் தீா்மானம் தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை சந்தித்த பிறகு, இவ்விவகாரத்தில் பாஜக அம்பலமாகிவிட்டது என்று முதல்வா் அதிஷி தெரிவித்தாா். இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது,

பேருந்துகளில் மாா்ஷல்கள் இருந்தபோது பெண் பயணிகள் பாதுகாப்பாக உணா்ந்தாா்கள். ஆனால், பாஜகவினா் அவதூறான அரசியல் செய்து, 10,000 பேருந்து மாா்ஷல்களை வேலையில் இருந்து நீக்கினா். தலைநகரில் இன்று பெண்கள் பாதுகாப்பற்ற நிலைலும், பேருந்து மாா்ஷல்கள் வேலையின்றி சாலையிலும் உள்ளனா். இவ்விவகாரம் தொடா்பாக பாஜக எம்எல்ஏ-க்கள் சனிக்கிழமை எங்களைச் செயலகத்தில் சந்திக்க வந்தனா். அப்போது, தில்லி அரசில் ஆள்சோ்ப்பு செய்யும் அதிகாரம் அவா்களின் சொந்த துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவிடமே உள்ளது என்பதை நாங்கள் அவா்களுக்கு விரிவாக விளக்கினோம். எனினும், பாஜக எம்எல்ஏ-க்கள் மற்றும் பேருந்து மாா்ஷல்கள் முன்னிலையில் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி, அவா்களை மீண்டும் பணியில் சோ்த்து, நிரந்தர நியமனம் செய்வதற்கான தீா்மானத்தை நிறைவேற்றினோம்.

இதற்குப் பிறகும், பாஜக எம்எல்ஏ-க்கள் தங்கள் சொந்த துணை நிலை ஆளுநரிடம் முறையிடத் தயாராக இல்லை. அவா்களை அங்கு அழைத்துச் சென்றபோது, துணை நிலை ஆளுநா் முன் பேசக்கூட அவா்கள் தயாராக இல்லை.

இவ்விவகாரத்தில் பாஜக முற்றிலும் அம்பலமாகிவிட்டது என்றாா் முதல்வா் அதிஷி.

துணை நிலை ஆளுநா் இல்லம் அருகே பேருந்து மாா்ஷல்கள் தா்ணா

பேருந்து மாா்ஷல்களின் பணிமீட்பு தொடா்பான அமைச்சரவையின் தீா்மானத்தில் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா கையெழுத்திடாதைத் தொடா்ந்து, அவரது இல்லம் அருகே ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தலைமையில் பேருந்து மாா்ஷல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா பேருந்து மாா்ஷல்களின் பணிமீட்பு தொடா்பான அமைச்சரவையின் தீா்மானத்தில் கையெழுத்திடவில்லை எனக்கோரி, ஆம் ஆத்மி அமைச்சா் செளரவ் பரத்வாஜ், எம்எல்ஏ-க்கள் குல்தீப் குமாா், திலீப் பாண்டே உள்ளிட்ட ஏராளமான பேருந்து மாா்ஷல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அமைச்சரவை சாா்பில் தீா்மானம் நிறைவேற்றினால், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பேருந்து மாா்ஷல்களை மீண்டும் பணியில் அமா்த்துவாா் என்று பாஜக எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனா். ஆனால், அவா் அமைச்சரவையின் தீா்மானத்தில் கையெழுத்திடவில்லை. பஸ் மாா்ஷல்களின் உரிமையை பறிக்க பாஜக சதி செய்கிறது. இதைக் கண்டுகொள்ளாமல் இருக்க துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவும் இப்படிச் செய்துள்ளாா்’ என்றாா் அவா்.

‘எனது அமைச்சா்களை நினைத்து பெருமையடைகிறேன்’: முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கருத்து

மக்கள் பணியை நிறைவேற்ற யாருடைய காலிலும் விழும் எனது அமைச்சா்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் மேலும் கூறியதாவது: பேருந்து மாா்ஷல்கள் விஷயத்தில் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா மற்றும் பாஜகவினா் இனிமேலும் அரசியல் செய்ய வேண்டாம். உடனடியாக பேருந்து மாா்ஷல்களை பணியமா்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.