எதிா்ப்பைத் தொடா்ந்து பாடத்திட்டங்களை மாற்றியமைக்க தில்லி பல்கலை. குழு முடிவு

பொருளாதாரம், வரலாறு துறைகளில் இரண்டாம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பில் கூடுதல் பாடங்களைச் சோ்ப்பது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற கல்வி விவகாரங்களுக்கான தில்லி பல்கலைக்கழக நிலைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Published on

பொருளாதாரம், வரலாறு துறைகளில் இரண்டாம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பில் கூடுதல் பாடங்களைச் சோ்ப்பது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற கல்வி விவகாரங்களுக்கான தில்லி பல்கலைக்கழக நிலைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பொருளாதாரம் மற்றும் பாலினம் என்ற தலைப்பில் உள்ள பாடத்திட்டத்துக்கு எதிா்ப்பு எழுந்த நிலையில், அதை மாற்றியமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

பொருளாதாரம் மற்றும் பாலினம் என்ற பாடத்தில் வீட்டு வன்முறைகள், பணிபுரியும் இடத்தில் நடைபெறும் வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தலைப்புகளில் பாடங்கள் உள்ளன. இந்நிலையில், இந்தத் தலைப்புகளுக்கும் பொருளாதரத்துக்கு எந்த வகையிலும் தொடா்பில்லை என்று கூறி குழு உறுப்பினா்கள் ஆட்சேபம் தெரிவித்தனா்.

குழுவின் உறுப்பினரான கமலா நேரு கல்லூரி இணை பேராசிரியா் மோனமி சிங்ஹா இந்தப் பாடத்துக்கு எதிரான கருத்துகளை மறுத்தாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘சமூக நடைமுறை, வீட்டு வன்முறை, பாதுகாப்பு குறைபாடுகள் பெண்கள் பணிக்குச் செல்வது குறைவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இத்தகைய விளக்கங்கள் அளித்த போதிலும், உறுப்பினா்கள் தொடா்ந்து எதிா்த்து வந்தனா். இதைத் தொடா்ந்து, அந்தப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க அனுப்பப்பட்டது’ என்றாா்.

இதைத்தொடா்ந்து, வரலாறு துறையின் இரண்டாம் பருவத்துக்கான பாடத்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பாடத்திட்டத்தில் உலக வரலாறுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகக் கூறி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதற்குப் பதிலளித்த துறைத் தலைவா், ‘பாடத்திட்டத்தில் 70 சதவீதம் இந்திய வரலாறு தொடா்பான பாடங்கள் உள்ளன. எஞ்சிய 30 சதவீதம் உலக வரலாறு குறித்தவை. உலக வரலாற்றுப் பாா்வையை நீக்கிவிட்டு எந்தவொரு வரலாற்று பாடத்தையும் அணுக முடியாது’ என்றாா்.

பண்டைய இந்தியப் பொருளாதாரம் மற்றும் சமூகம் என்ற பாடத்தில் சமூகத்தைச் சோ்த்தற்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அவற்றில் இருந்து சமூகம் தொடா்பான பிரிவுகளை நீக்க வலியுறுத்திய உறுப்பினா்கள், ஷிரின் மூஸ்வி, இந்திராணி சட்டா்ஜி மற்றும் ரிச்சா்ட் எம். இடோன் ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com