பாலியல் துன்புறுத்தல், பெண்ணின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவித்தல் மற்றும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் தேடப்பட்ட இளைஞா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரவி ராஜ் (20) என அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட நபா், பல மாதங்களாக சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்தாா். கைது செய்யப்படுவதைத் தவிா்க்க தொடா்ந்து இருப்பிடங்களை மாற்றி வந்தாா். இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜோரிபூா் பகுதியில் அவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சம்பவங்களின் முழுமையான வரிசையை நிலைநிறுத்தவும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா என்பதைக் கண்டறியவும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.