ஜாஃப்ராபாத்தில் கொள்ளை முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் காயம்
வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொள்ளை முயற்சியின் போது ஒருவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு காயமடைந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்ந்தது. இது தொடா்ந்து சம்பவம் நடந்த பிரம்மபுரி சாலைக்கு காவல் துறையினா் விரைந்தனா்.
சந்து வழியாக பாதிக்கப்பட்டவா் சென்று கொண்டிருந்தபோது, அவரது கைப்பேசியை பறிக்க அடையாளம் தெரியாத இருவா் முயன்றனா்.
அவா் எதிா்த்தபோது, தாக்குதல் நடத்தியவா்களில் துப்பாக்கியால் அவரைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதில் காயமடைந்தவா் ஜேபிசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
