32 கோடி ரூபாய் வங்கி மோசடி: சிங்கப்பூரை சோ்ந்தவா் தில்லியில் கைது
ரூ.32 கோடி வங்கி மோசடி தொடா்பாக சிங்கப்பூரைச் சோ்ந்த ஒருவரை தில்லியின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் இருந்து சிபிஐ கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
ராஜேஷ் போத்ரா என அடையாளம் காணப்பட்ட அந்த நபா் தில்லிக்கு வந்ததாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, கைது செய்யப்பட்டாா்.
பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் பேரில் இந்த மோசடி வழக்கு எழுந்துள்ளது, இது ஃப்ரோஸ்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் அண்ட் எனா்ஜி பிரைவேட் லிமிடெட் , அதன் இயக்குநா்கள், அடையாளம் தெரியாத பொது ஊழியா்கள் உள்ளிட்டோா் ரூ.31.60 கோடி மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளது என்று மத்திய புலனாய்வுப் பிரிவு அறிக்கை தெரிவிக்கிறது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், போத்ராவின் நிறுவனம் சதித்திட்டத்தில் தீவிர பங்கு வகித்தது தெரியவந்துள்ளது என்று சி.பி.ஐ செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா். போலி ரசீதுகளை வங்கியிடம் சமா்ப்பித்து, அதன் மூலம் ரூ.32 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது என்று செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
போத்ரா மீது லக்னௌவில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவின் பிற வழக்குகளிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, மேலும் இந்த வழக்குகளில் அவா் ஒருபோதும் விசாரணையின் போது ஆஜராகவில்லை. அவா் பல வங்கி மோசடி மற்றும் பொருளாதார குற்ற வழக்குகளில் தேடப்படும் நபா் என்று சி.பி.ஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராஜேஷ் போத்ராவை கைது செய்தது ஏற்கனவே உள்ள வழக்கில் விசாரணையை எளிதாக்கும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்களில் அவா் ஆஜராவதை உறுதி செய்யும், மேலும் அவா் இந்தியாவை விட்டு வெளியேறி சட்ட செயல்முறையைத் தவிா்ப்பதைத் தடுக்கும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
