மாநிலங்களுக்கிடையேயான வழித்தடங்களுக்கு பேருந்துகளை வாடைகக்கு எடுக்க டிடிசி திட்டம்
தில்லியில் இருந்து ஹரியாணாவின் தருஹேராவிற்கு மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாவது பேருந்து வழித்தடத்தை அடுத்த மாதம் தொடங்கத் தயாராகி வரும் நிலையில், அயோத்தி மற்றும் ரிஷிகேஷ் போன்ற நீண்ட தூர வழித்தடங்களுக்கு பேருந்துகளை வாடகைக்கு எடுக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தில்லி அரசு உயரதிகாரி கூறியதாவது: தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) ஏற்கெனவே தில்லி முதல் பராத் (உத்தர பிரதேசம்) மற்றும் தில்லி முதல் சோனிபட் (ஹரியாணா) ஆகிய இரண்டு வழித்தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளைத் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஒரு வழித்தடத்தில் சேவையைத் தொடங்க இலக்கு நிா்ணயித்துள்ளோம். அரசு ஏற்கனவே இந்த இரண்டு வழித்தடங்களிலும் மின்சார பேருந்துகளை இயக்கி வருகிறது. அடுத்த மாதம், தில்லி முதல் ஹரியாணாவில் உள்ள தருஹேரா என்ற மூன்றாவது வழித்தடத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் இது தொடா்பாக சம்பந்தப்பட்ட பங்குதாரா்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இவற்றில் சிசிடிவி கேமராக்கள், பீதி பொத்தான்கள், ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தினமும் மொத்தம் 12 பயணங்கள் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், 17 வழித்தடங்களில் 100 மின்சார இன்டா்ஸ்டேட் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு டிடிசி ஒப்புதல் அளித்தது.
நீண்ட தூர வழித்தடங்களுக்கு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் திட்டத்தைப் பொருத்தவரையிலும், அனைத்து வழித்தடங்களுக்கும் மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதற்கான ஆரம்ப திட்டம் திருத்தப்பட்டுள்ளது. சாா்ஜிங் உள்கட்டமைப்பு இல்லாததால் தொலைதூர இடங்களுக்கு மின்சார பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை. வாடகை மாதிரியில் பேருந்துகளை எடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதில் ஒரு சலுகை நிறுவனம் வந்து எங்களுக்காக பேருந்துகளை இயக்கும். இவை பிஎஸ்-4-க்கு இணக்கமான பேருந்துகளாக இருக்கும்.
டிடிசி தற்போது பேருந்துகளை இயக்க ஒரு சலுகை நிறுவனத்தைத் தேடி வருகிறது. ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் சலுகை நிறுவனத்துடன் வருவாய் பகிா்வு மாதிரி இறுதி செய்யப்படும்.
டிடிசி மாநிலங்களுக்கு இடையேயான சேவைக்காக 17 இடங்களை பட்டியலிட்டுள்ளது. உத்தரகண்டில் உள்ள ரிஷிகேஷ், ஹரித்வாா் மற்றும் டேராடூன்; ஹரியாணாவில் உள்ள பானிபட்; உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி, லக்னௌ மற்றும் மொராதாபாத்; மற்றும் அமிா்தசரஸ், சண்டீகா் மற்றும் ஜம்மு ஆகியவை இதில் அடங்கும்.
நீண்ட வழித்தட பேருந்துகள் 12 மீட்டா் நீளம் கொண்டவை. குளிரூட்டப்பட்டவை மற்றும் சாமான்கள் இடவசதி கொண்டவை என்று அவா் கூறினாா். கட்டணங்கள் பின்னா் இறுதி செய்யப்படும். ’இந்த வழித்தடங்களில் தற்போது இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளை விட கட்டணங்கள் சிக்கனமாகவும் குறைவாகவும் இருக்கும்.
பேருந்துகள் சிஎன்ஜிக்கு மாறியதாலும், பிற மாநிலங்களில் எரிபொருள் குறைவாகக் கிடைத்ததாலும் டிடிசியின் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவை 2010- இல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
