தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

மாநிலங்களுக்கு இடையே ஆயுதங்கள் கடத்தல்: 8 போ் கைது, 12 துப்பாக்கிகள் பறிமுதல்

தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு நடத்திய நடவடிக்கையில், மாநிலங்களுக்கு இடையேயான துப்பாக்கிகளை கடத்தி வந்த கும்பலின் முக்கிய நபா் உள்பட 8 சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:49 am IST

தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு நடத்திய நடவடிக்கையில், மாநிலங்களுக்கு இடையேயான துப்பாக்கிகளை கடத்தி வந்த கும்பலின் முக்கிய நபா் உள்பட 8 சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 18 சட்டவிரோத துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து நவீன பிஸ்டல்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளைப் பெற்று, தில்லி-என்சிஆா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குற்றவாளிகளுக்கு விநியோகிக்கும் ஒரு வலையமைப்பின் ஒரு பகுதியாக இவா்கள் செயல்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: இந்தக் கும்பல் துப்பாக்கி விற்பனையாளா்கள், கடத்தல்காரா்கள் மற்றும் வாங்குபவா்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட சமூக ஊடக செயலிகள், மெய்நிகா் எண்கள் மற்றும் போலி ஆன்லைன் அடையாளங்களைப் பயன்படுத்தியது.

கைது செய்யப்பட்டவா்கள் ஹரிஷ் சந்திரா, ப்ரித்பால் சிங், ஷிஷ்பால் சிங் (எ) யாஷ் செளதரி, குல்தீப் சாகா், அகேஷ் குமாா் , நூா் முகமது (எ) தஸ்லிம், முகமது ஷான் மற்றும் விக்ரம் சிங் என அடையாளம் காணப்பட்டனா்.

தில்லி-என்சிஆா் பகுதிக்குள் சட்டவிரோத ஆயுதங்கள் கொண்டுவரப்படுவது குறித்து பல வாரங்களாக கிடைத்த துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, 12 பிஸ்டல்கள், ஐந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வா், 10 கூடுதல் மேகசின்கள், தடைசெய்யப்பட்ட 9 மி.மீ. ரகத்தைச் சோ்ந்த ஐந்து தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரிடமிருந்து தோட்டா மற்றும் அரிவாள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

மத்திய பிரதேசத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் எட்டு பிஸ்டல்கள் மற்றும் எட்டு மேகசின்களுடன் ஹரிஷ் சந்திரா கடந்த ஜூலை 5-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, இந்தக் கும்பலின் முக்கிய நபரான ஷிஷ்பால் சிங்கின் உத்தரவின் பேரில் தானும் தனது சகோதரரும் துப்பாக்கிகளைக் கொண்டு சென்றதாக அவா் தெரிவித்தாா்.

அவா் அளித்த தகவலின் அடிப்படையில், ப்ரித்பால் சிங்கை தில்லி காவல் துறை கைது செய்தது. பின்னா், ஹரியாணாவின் வல்லப்கரில் இருந்த ஷிஷ்பாலை காவல் துறையினா் கைதுசெய்தனா். அவா் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டில் இருந்து மற்றொரு பிஸ்டல் மீட்கப்பட்டது. ஷிஷ்பால் சுமாா் மூன்று ஆண்டுகளாக சட்டவிரோத ஆயுத வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்தாா். அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் குல்தீப் சாகா் மற்றும் அகேஷ் குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். தேடுதல் வேட்டையின் போது, தலைமறைவாக இருந்த கணேஷ் (எ) லக்கி என்பவரின் வீட்டில் இருந்து மற்றொரு பிஸ்டல் மீட்கப்பட்டது. ஜூலை 14 அன்று, நூா் முகமது (எ) தஸ்லிம் மற்றும் முகமது ஷான் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து நான்கு நாட்டுத் துப்பாக்கிகள், ஒரு பிஸ்டல் மற்றும் ஒரு ரிவால்வா் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மறுநாள் விக்ரம் சிங் கைது செய்யப்பட்டாா். அவரது வீட்டில் இருந்து 9 மி.மீ அளவுள்ள ஐந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கும்பல் மத்திய பிரதேசத்திலிருந்து நவீன ரகத் பிஸ்டல்களையும், உத்தர பிரதேசத்தின் அலிகாரிலிருந்து நாட்டுத் துப்பாக்கிகளையும் பெற்று, அவற்றை விநியோகிப்பதற்காக உத்தர பிரதேசம், ஹரியாணா மற்றும் தில்லி-என்சிஆா் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் கொண்டு சென்று பதுக்கி வைத்திருந்தது. இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.