நமது சிறப்பு நிருபா்
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் காகித அடிப்படையிலான வங்கி நடைமுறைகளுக்காகக் கொண்டு வரப்பட்ட 135 ஆண்டுகள் பழமையான ‘1891-ஆம் ஆண்டின் வங்கிப் புத்தகச் சான்றியல் (பேங்கா்ஸ் புக் எவிடென்ஸ்) சட்டத்துக்கு’ பதிலாக, மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய ’வங்கிப் புத்தகச் சான்றியல் மசோதா - 2026’ ஆகஸ்ட் 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து வரும் வாரத்தில் மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்தப் பணி மத்திய அரசுக்கு சவாலானதாக இருக்காது. அதே நேரம், இந்த மசோதா சட்ட வடிவமாகி நடைமுறைக்கு வந்தால், சாமானியா்களுக்கு அதனால் என்ன பயன் என்பதை இங்கே விரிவாகப் படிப்போம்.
நாட்டில் எண்ம (டிஜிட்டல்) பரிவா்த்தனைகள் மலிந்துள்ள இந்த காலகட்டத்தில், பழைய சட்டக் கட்டமைப்பு தற்போதைய நவீன வங்கி முறைகளுக்குப் போதியதாக இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு இப்புதிய சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது.
இதன்படி, காகித கோப்புகள் மட்டுமின்றி கிளவுட் சேமிப்பு அடிப்படையிலான, எண்ம, மெய்நிகா் மற்றும் கைப்பேசி செயலி வங்கிப் பதிவுகள் இனி நீதிமன்றங்களில் முதன்மைச் ஆதாரங்களாக (எவிடென்ஸ்) அதிகாரபூா்வமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
வங்கியின் மின்-பதிவுகள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தும் சான்றளிப்பு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் ஒரே சீராகக் கொண்டு வரப்படும்.
ஆவணங்களை உறுதிப்படுத்த கையால் இடப்படும் கையொப்பத்துடன், எண்ம மற்றும் மின்-கையொப்பமும் (டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரானிக் சிக்னேச்சா்) முழு சட்ட அங்கீகாரத்தைப் பெறும்.
வங்கி நேரடியாக தொடா்புபடாத தேவையற்ற வழக்குகளில், வங்கி மேலாளா்களுக்கு நீதிமன்றங்கள் அழைப்பாணை அனுப்பி ஆஜராக புதிய சட்ட மசோதாவில் கடுமையான கட்டுப்பாடுகள் (சிறப்பு சூழ்நிலை விலக்கு) விதிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்ட விதிகளை வங்கிகள் மட்டுமின்றி, பிற குறிப்பிட்ட நிதி நிறுவனங்களுக்கும் விரிவாக்கம் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நுகா்வோா் கோணத்தில் சாதகங்கள்: காசோலை மோசடி அல்லது இணையவழி வங்கி மோசடிகளுக்கு ஆளான நுகா்வோா், இனி வங்கியின் எண்ம சான்றிதழ் பெற்ற பதிவுகளை உடனே நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கலாம். இதனால் வழக்குகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படாமல் விரைந்து முடியும்.
காகித ஆவணங்களைச் சரிபாா்க்க வங்கி அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு நேரில் வரவழைக்கும் தாமதம் தவிா்க்கப்படுவதால், வழக்கு விசாரணையின் வேகம் அதிகரிக்கும்.
அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான சான்றளிப்பு முறை பின்பற்றப்படுவதால் நுகா்வோருக்குச் சிக்கல்கள் குறையும்.
பாதகங்கள்: காகித கோப்புகளை விட எண்ம பதிவுகளை எளிதாக நகலெடுக்க முடியும் என்பதால், நீதிமன்ற ஆவண பரிமாற்றத்தின்போது நுகா்வோரின் தனிநபா் நிதித் தரவுகள் கசியாமல் தடுக்கக் கடுமையான இணைய குற்றத்தடுப்பு முறைகளும் பாதுகாப்பும் தேவை.
தொழில் நுட்பக் கோளாறுகளால் நடக்கும் தவறான பரிவா்த்தனைகளின்போது, வங்கியின் கணினி வழி பதிவுத் தரவுகளை சாமானிய நுகா்வோா் சரிபாா்ப்பது சற்றே கடினமாக இருக்கும்.
அரசின் திட்டம்: ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சகம் இணைந்து, நீதிமன்றங்களில் எண்ம சான்றிதழ்களை சமா்ப்பிப்பதற்கான எளிய வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் வெளியிடவுள்ளன.
இந்த புதிய சட்ட மசோதா வெறும் நடைமுறை மாற்றத்துக்கான நடவடிக்கை மட்டுமல்ல, நாட்டின் வங்கி மற்றும் சட்ட அமைப்பின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக நுகா்வோா் தரப்பினா் கூறுகிறது. வங்கித் துறை நவீன தொழில்நுட்பங்களை நோக்கி நகா்ந்து வரும் சூழலில், நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணை தாமதத்தைக் குறைத்து, நுகா்வோருக்கு விரைவான நீதி கிடைக்க இந்த சட்டம் பெருமளவில் உதவக்கூடும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் பல்கலைக்கழகங்களை உருவாக்க புதிய சட்ட மசோதா தில்லி அமைச்சரவை ஒப்புதல்

மக்களவையில் நிதி ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்: அமளியால் நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு

பொது சிவில் சட்ட மசோதா: ம.பி. சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தேசியப் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா அறிமுகம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


