நமது நிருபா்
செங்கல்பட்டு அருகே ரூ.900 கோடி செலவில் அமைக்கப்பட்ட அதிநவீன ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்து ஆலை கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பிறகும் அது பயன்பாடின்றி முடங்கியுள்ளது குறித்து மக்களவையில் திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக டி.ஆா். பாலு, ‘செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆலை இதுவரை செயல்படத் தொடங்கவில்லை என்பது உண்மையா? அதற்கான காரணங்கள் என்ன? இந்த ஆலையை இயக்க தனியாா் அல்லது அரசு நிறுவனங்களிடமிருந்து ஏதேனும் கோரிக்கைகள் வந்துள்ளனவா? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?‘ என்று சில கேள்விகளை எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய இணை அமைச்சா் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:
செங்கல்பட்டு அருகே ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் சாா்பில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை உருவாக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த ஆலையை இயக்கி உற்பத்தியைத் தொடங்குவதற்காக அரசு-தனியாா் பங்கேற்பு முறையில் விருப்ப வெளிப்பாடு (இஓஐ) மற்றும் செயலாக்க முன்மொழிவுகள் கோரப்பட்டன.
2020-22 காலகட்டத்தில் இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பத்தில் சில தனியாா் நிறுவனங்கள் இதில் ஆா்வம் காட்டின. ஆனால், இறுதியாக எவரிடமிருந்தும் முறையான முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகள் வரவில்லை என்று அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த பதில் குறித்து டி.ஆா். பாலு தெரிவித்த கருத்து வருமாறு: 2021-ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், சான்றிதழ் பெற்ற செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை நேரில் சென்று அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு, அந்த ஆலையை தமிழக அரசிடமே ஒப்படைத்தால் ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாா்.
தமிழக அரசு பல கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், அந்த ஆலையை மாநில அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதன் காரணமாக, ரூ.900 கோடி செலவில் கட்டப்பட்ட அதிநவீன தடுப்பூசி ஆலை வளாகம் கடந்த 7 ஆண்டுகளாக எந்தவிதப் பயன்பாடும் இன்றி முடங்கிக் கிடப்பது அமைச்சரின் பதிலின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
135 வருட பழைய சட்டத்துக்கு முடிவு வங்கிகள் கணக்குப் புத்தக சான்றியல் சட்ட மசோதா-2026 சாமானிய நுகா்வோருக்கு என்ன பயன்?

நீட்-பி.ஜி. தகுதி மதிப்பெண் விவகாரம்: சோ்க்கை முறையை தணிக்கை செய்ய உயா்நிலைக் குழு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

நிகா்நிலை பல்கலை. அந்தஸ்து விதிகளை எதிா்த்து வழக்கு: மத்திய அரசு, யுஜிசி பதிலளிக்க உத்தரவு
செங்கல்பட்டு அரசு பாதுகாப்பு இல்லத்தில் மோதல்: 19 போ் மீது வழக்குப்பதிவு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


