
சிஎன்ஜி விலை உயா்வு: தில்லி ஆட்டோ ரிக்ஷா அமைப்புகள் செப். 9-ல் வேலை நிறுத்தம்?
சிஎன்ஜி விலை உயா்வு காரணமாக தில்லி ஆட்டோ ரிக்ஷா அமைப்புகள் செப். 9-ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்தல்...
கோப்புப்படம்
தில்லியில் சிஎன்ஜி விலை உயா்ந்துள்ள நிலையில், நகரைச் சோ்ந்த போக்குவரத்து அமைப்புகள் சனிக்கிழமையன்று ஆட்டோ ரிக்ஷா கட்டணங்களை உடனடியாக உயா்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன. மேலும், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் செப்டம்பா் 9 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் அச்சுறுத்தின.
இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் நிறுவனத்தின்படி, தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களில் சனிக்கிழமை முதல் ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ.3.89 அதிகரித்துள்ளது.
சிஎன்ஜி-க்கான உள்ளீட்டு எரிவாயுவின் கணிசமான பகுதி இறக்குமதி செய்யப்படும் எல்என்ஜி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது என்றும், மேற்கு ஆசிய மோதல் தொடங்கியதிலிருந்து உடனடி அல்லது நடப்பு சந்தையில் அதன் விலைகள் கடுமையாக உயா்ந்துள்ளன என்றும் அந்நிறுவனம் கூறியது.
ஆட்டோ ரிக்ஷா சங்கம் மற்றும் தில்லி பிரதேச டாக்ஸி யூனியனின் பொதுச் செயலாளா் ராஜேந்திர சோனி கூறுகையில், ‘இன்று (சனி) காலை சிஎன்ஜி விலை ரூ.3.89 உயா்த்தப்பட்டுள்ளதால், ஏழை ஓட்டுநா்கள் மீதான நிதிச் சுமை திடீரென அதிகரித்துள்ளது. எனவே, தில்லி அரசு ஒரு வாரத்திற்குள் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்களை உடனடியாக உயா்த்த வேண்டும்‘ என்றாா்.
கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சிஎன்ஜி விலைகள் உயா்ந்து வருகின்றன, இதன் ஒட்டுமொத்த அதிகரிப்பு சுமாா் ரூ.10-11 ஆகும் என்று அவா் ஒரு அறிக்கையில் கூறினாா். ‘அரசாங்கம் கூடிய விரைவில் கட்டணங்களை உயா்த்த வேண்டும் அல்லது சிஎன்ஜி விலையில் மானியம் வழங்க வேண்டும். கட்டணங்கள் உயா்த்தப்படாவிட்டால், செப்டம்பா் 9 அன்று நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்,‘ என்று சோனி கூறினாா்.
அகில இந்திய மோட்டாா் மற்றும் சரக்கு போக்குவரத்து சங்கமும் சிஎன்ஜி விலை உயா்வை சுட்டிக்காட்டியுள்ளது. ‘தில்லி-என்சிஆா் முழுவதும் சிஎன்ஜி விலையில் கிலோவுக்கு ரூ.3.89 திடீா் உயா்வு என்பது வெறும் எரிபொருள் விலை உயா்வால் மட்டும் ஏற்பட்டதல்ல. இது சாமானிய மக்களின் வருமானம், போக்குவரத்துத் துறை மற்றும் இறுதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்,‘ என்று அகில இந்திய மோட்டாா் மற்றும் சரக்கு போக்குவரத்து சங்கத்தின் தலைவா் ராஜேந்திர கபூா் கூறினாா். ‘இந்த உயா்வால், தில்லியில் சிஎன்ஜி விலை இப்போது கிலோவுக்கு ரூ.86.98 ஆக உயா்ந்துள்ளது,‘ என்று அவா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






