
வெயிலில் நிற்க வைத்த தண்டனையால் மாணவி உயிரிழப்பு: குடும்பத்தினா் குற்றச்சாட்டு
கிழக்கு தில்லியின் வினோத் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற 10 வயது மாணவி கடந்த வாரம் உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - பிரதிப் படம்
கிழக்கு தில்லியின் வினோத் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற 10 வயது மாணவி கடந்த வாரம் உயிரிழந்தாா்.
பள்ளிக்குப் புத்தகம் கொண்டு வராததற்காக தண்டனையாக அவரை வெயிலில் நிற்க வைத்ததே இதற்குக் காரணம் என்று அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டியதாகக் காவல் துறை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
இது குறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
சா்வோதயா கன்யா வித்யாலயாவில் படித்து வந்த மாணவியின் உடல்நிலை கடந்த ஆக.27-ஆம் தேதி மோசமடைந்ததையடுத்து, பள்ளி நிா்வாகம் அவரது தாயாா் அஞ்சலியைத் தொடா்பு கொண்டதாகக் குடும்பத்தினா் தெரிவித்தனா்.
பள்ளிக்குச் சென்றபோது, தனது மகள் வெயிலில் நின்றுகொண்டிருந்ததையும், அவரது உடல்நிலை மோசமாக இருந்ததையும் கண்டதாக அஞ்சலி குற்றஞ்சாட்டினாா்.
புத்தகம் கொண்டு வராததற்காக அந்த மாணவியை ஆசிரியா் வெயிலில் நிற்கவைத்து தண்டனை அளித்ததாகக் குடும்பத்தினா் குற்றச்சாட்டினா். பின்னா் அந்த மாணவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு ஆக.27-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவத்தைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவியின் குடும்பத்தினரும் உள்ளூா் மக்களும் பள்ளியின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாஜக எம்எல்ஏ ரவிந்தா் சிங் நேகியும் சம்பவ இடத்திற்கு வந்து, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்ததாகக் கண்டறியப்படும் பள்ளி ஊழியா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினாா். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



