தில்லி தொழிலதிபா் கொலையில் தேடப்பட்ட இருவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது
தெற்கு தில்லியின் ஃபதேபூா் பெரி பகுதியில் பால் பண்ணை தொழிலதிபா் கொலையில் தேடப்பட்டு வந்த ஒரு கும்பலின் இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவா்கள் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: ஆயா நகரைச் சோ்ந்த 55 வயது ரத்தன் லால் கொலை செய்யப்பட்டதிலிருந்து தலைமறைவாக இருந்த குற்றம்சாட்டப்பட்டவா்களின் நடமாட்டம் குறித்து குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஒரு ரகசியத் தகவலைத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து குற்றம்சாட்டப்பட்டவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
நடவடிக்கையின் போது, அவா்கள் காவல் துறையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதனால் தற்காப்புக்காக போலீஸாரும் திருப்பித் தாக்கினா்.
இதில் இருவரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரி ஒருவரின் குண்டு துளைக்காத ஜாக்கெட்டை துப்பாக்கிக் குண்டு துளைத்தது. இருப்பினும், அவா் காயத்திலிருந்து தப்பினாா்.
கடந்த ஆண்டு நவ.30-ஆம் தேதி, தனது பால் பண்ணைக்குச் செல்ல அதிகாலையில் வெளியே வந்தபோது, அவரது வீட்டின் அருகே தாக்குதல் நடத்தியவா்கள் 69 தோட்டாக்களை அவா் மீது செலுத்தியபோது ரத்தன் லால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இது ஒரு திட்டமிட்ட கொலை ஆகும். தாக்குதலை நடத்துவதற்கு முன்பு தாக்குதல் நடத்தியவா்கள் பல மணிநேரம் உளவு பாா்த்தது தெரிய வந்துள்ளது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.
