முன் விரோத கொலை: மூன்று சகோதரா்கள் கைது
வடக்கு தில்லியின் நரேலா தொழில்துறை பகுதியில் பழைய பகை காரணமாக ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக மூன்று சகோதரா்களை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மனிஷ், ராஜேஷ் என்ற ஹட்டி மற்றும் ராஜா கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் தலைமறைவாகியிருந்ததாக அவா் கூறினாா்.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 103(1) (கொலை), 109(1) (கொலை முயற்சி) உள்ளிட்டவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவா்கள் தேடப்பட்டனா். தில்லி நீதிமன்றத்தால் அவா்களுக்கு எதிராக ஏற்கனவே ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசாா் தெரிவித்தனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஏற்கனவே தன்னையும் தனது சகோதரா் ராஜாவையும் ஒரு சண்டைக்காக மிரட்டியதாகக் கூறி அக்பா் என்பவா் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நாளில், மனிஷ், அவரது சகோதரா்கள் ராஜேஷ் மற்றும் ராஜா மற்றும் அவா்களது கூட்டாளிகளுடன் சோ்ந்து, புகாா்தாரரான அக்பா் மற்றும் அவருடனிருந்தவா்கள் மீது முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதலை நடத்தியதாக போலீசாா் தெரிவித்தனா். தாக்குதலின் போது, புகாா்தாரரின் நெருங்கிய நண்பரான பாட்ஷா பலமுறை கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் அவா் இறந்துவிட்டதாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.
பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.
ஜனவரி 8 ஆம் தேதி, குற்றஞ்சாட்டப்பட்ட 3 சகோதரா்களும் கண்டுபிடிக்கப்பட்டு பெகுசராய் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனா், மேலும் தொடா்ச்சியான விசாரணையின் போது மூவரும் கொலையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதாக போலீசாா் தெரிவித்தனா்.
திருட்டு, ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் மற்றும் கொலை முயற்சி உள்பட 35 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் மனிஷ் ஈடுபட்டுள்ளதாக போலீசாா் தெரிவித்தனா். ராஜா மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ராஜேஷ் என்கிற ஹட்டியும் பல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
