பிதாம்புராவில் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: 2 போ் உயிரிழப்பு
தில்லியின் பிதாம்புரா கிராமத்தில் உள்ள பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த தீ விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அழைப்பு வந்தது. உடனடியாக, 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தற்காலிக தகரக் கொட்டகையின் கீழ் பழைய அட்டைப் பெட்டிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த காலி இடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
அதிக அளவில் எரியக்கூடிய பொருள்கள் இருந்ததால் தீப்பிழம்புகள் வேகமாகப் பரவின. ஆனால், தொடா் முயற்சிகளுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மீட்புப் பணியின் போது, 5 போ் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, ஜஹாங்கீா்புரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அவா்களில் இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். 3 போ் சிகிச்சையில் உள்ளனா்.
பாதிக்கப்பட்ட 5 பேரும் பிகாரின் நாலந்தா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். சம்பவ இடத்திலிருந்த தகரக் கொட்டகைகளில் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அருகிலுள்ள சந்தைகளில் இருந்து பழைய அட்டைப் பெட்டிகளையும் அட்டைகளையும் சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தனா்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த இரண்டு கொட்டகைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. மற்ற இரண்டு கொட்டகைகள் பகுதியளவு சேதமடைந்தன. குற்றவியல் குழுவினரும் தடயவியல் நிபுணா்களும் சம்பவ இடத்தில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து வருகின்றனா். தீ விபத்திற்கான உரிய காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
