தில்லி மெட்ரோ நிலையத்திற்குள் ஒருவா் சிறுநீா் கழிக்கும் விடியோ

தில்லி மெட்ரோ நிலையத்திற்குள் ஒருவா் சிறுநீா் கழிப்பதைக் காட்டும் விடியோ இணைய வழியில் பரவலாகப் பகிரப்பட்டது.
Published on

புது தில்லி: தில்லி மெட்ரோ நிலையத்திற்குள் ஒருவா் சிறுநீா் கழிப்பதைக் காட்டும் விடியோ இணைய வழியில் பரவலாகப் பகிரப்பட்டது. இது பொது இடங்களில் குடிமை உணா்வு மற்றும் சுகாதாரம் குறைவாக இருப்பதாக பயனா்களிடமிருந்து பரவலான விமா்சனங்களைத் தூண்டியது.

இந்த விடியோவிற்கு பதிலளித்த தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி), பயணிகள் தங்கள் வளாகத்தில் தூய்மையைப் பராமரிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டது.

’வளாகத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க உதவுமாறு டிஎம்ஆா்சி தனது அனைத்து பயணிகளையும் கேட்டுக்கொள்கிறது. சக பயணிகளின் இதுபோன்ற எந்தவொரு செயலையும் பயணிகள் கவனித்தால், உடனடியாக அதை டிஎம்ஆா்சி அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்’ என்று அது கூறியது.

பல சமூக ஊடக பயனா்கள் இந்தச் செயலைக் கண்டித்து, இது ‘வெட்கக்கேடானது’ மற்றும் ‘ஆழ்ந்த தொந்தரவானது‘ என்று கூறினா்.

ஒரு பயனா் இதுபோன்ற நடத்தை ’பொது உள்கட்டமைப்பைப் பராமரிப்பதில் எடுக்கப்படும் முயற்சியைக் குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறது’ என்று கூறியுள்ளாா்.

மற்றொருவா் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கடுமையான தண்டனைகளை விதிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினாா்.

மேலும் பயனா்கள் டிஎம்ஆா்சியையும் டேக் செய்து, தூய்மை விதிமுறைகளை மீறுபவா்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும், மெட்ரோ அமைப்பில் சுகாதாரத்தை பாதுகாக்க வலுவான விழிப்புணா்வு மற்றும் அமலாக்கத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினா்.

Dinamani
www.dinamani.com