ரயில்வே காலனி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்த மூவா் கும்பல் கைது
தில்லி முழுவதும் உள்ள ரயில்வே காலனிகளில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூவரை போலீஸாா் கைது செய்து பணம், நகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குடியிருப்பாளா்கள் வழக்கமாக காலையில் வேலைக்குச் சென்று மாலை தாமதமாகத் திரும்புவதைக் கவனித்த பின்னா், ரயில்வே காலனிகளில் இந்தக் கும்பல் கவனம் செலுத்தியது. இதனால் பூட்டிய வீடுகள் எளிதாக இலக்காகின.
கிஷன்கஞ்சில் உள்ள ரயில்வே காலனியில் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்ததாகப் புகாரளிக்கப்பட்டதைத் தொடா்ந்து மூவரும் கைது செய்யப்பட்டனா். புகாா்தாரரான கிருஷ்ணன் தேவ், குருகிராமில் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தபோது தனது வீடு உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் 50 கனடிய டாலா்கள் திருடப்பட்டதாக தெரிவித்தாா்.
அந்தப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட காட்சிகளை ஒரு போலீஸ் குழு ஆய்வு செய்தது. சந்தேக நபா்கள் பூட்டிய வீடுகளை உளவு பாா்த்த பிறகு, பூட்டுகளை உடைக்கும் கருவிகளுடன் திரும்பி வந்தது தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் சிதைக்கப்பட்ட எண் தகடு கொண்ட காரில் வந்து தப்பிச் செல்வது காணப்பட்டது.
பகுதி பதிவு விவரங்களைப் பயன்படுத்தி போலீஸாா் வாகனத்தைக் கண்டுபிடித்தனா். அது உத்தர பிரதேசத்தின் படான் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தனா்.
ஜங்புரா ரயில்வே காலனியில் அவா்களைக் குழு கண்டுபிடித்தது. அங்கு ஜனவரி 16- ஆம் தேதி மற்றொரு கொள்ளை முயற்சியின் போது சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட நபா்கள் பூரே (33), அருண் ரத்தோா் (26) மற்றும் நிஷாந்த் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
அவா்கள் அனைவரும் படான் பகுதியைச் சோ்ந்தவா்கள். அவா்களில் இருவா் சிசிடிவி காட்சிகளில் காணப்பட்ட சந்தேக நபா்களுடன் ஒத்துப்போனது தெரிய வந்தது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கிஷன்கஞ்ச் மற்றும் ஜங்புராவில் உள்ள ரயில்வே காலனிகளில் கொள்ளைச் சம்பவங்களைச் செய்ததாக ஒப்புக்கொண்டனா்.
சுல்தான்புரி மற்றும் மண்டோலியில் உள்ள அவா்களின் வாடகை வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.50,000 ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வெளிநாட்டு நாணயம், ஆவணங்கள் மற்றும் பூட்டுகளை உடைக்கப் பயன்படுத்தப்பட்ட இரும்பு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்ற வழக்குகளுடன் தொடா்புடைய 416 கிராம் வெள்ளி நகைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.
