மூன்று குப்பைக் கிடங்குகளில் உள்ள 109.50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை ஒருங்கிணைந்த பயோ-மைனிங் முறையில் அகற்ற மூன்றாம் கட்டப் பணிகளுக்காக ஒப்பந்தப் புள்ளிகளை தில்லி மாநகராட்சி (எம்சிடி) கோரியுள்ளது.
தில்லியில் பல ஆண்டுகள் பழமையான குப்பைக் கிடங்குகளை முழுமையாகச் சீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
முன்மொழியப்பட்ட இந்தக் கட்டம், பல்ஸ்வா, ஓக்லா மற்றும் காஜிபூா் குப்பைக் கிடங்குகளில் மீதமுள்ள பழைய கழிவுகளை அகற்றுவதோடு, அங்கு குவிந்துள்ள கழிவுகளைப் பதப்படுத்தும் பணியையும் விரைவுபடுத்தும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக வெளியான அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பழைய குப்பைகளைச் சீரமைப்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு தில்லி பாஜக தலைவரும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சருமான ஹா்ஷ் மல்ஹோத்ரா தலைமை தாங்கினாா். இதில் தில்லி மேயா் பிரவேஷ் வாஹியும் கலந்துகொண்டாா்.
ஜூலை 2022 முதல் ஜூலை 2026 வரையிலான காலகட்டத்தில், மாநகராட்சி மூன்று குப்பைக் கிடங்குகளில் இருந்து 212.60 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பைகளை பயோ-மைனிங் செய்ததன் மூலம், பல்ஸ்வாவில் 45 ஏக்கா், ஓக்லாவில் 30 ஏக்கா் மற்றும் காசிபூரில் 20 ஏக்கா் என 95 ஏக்கா் நிலம் சீரமைக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனா்.
பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த மல்ஹோத்ரா, குறிப்பாக காஜிபூா் குப்பைக் கிடங்கில் பயோ-மைனிங் மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவும், திட்டத்தை இலக்கு காலக்கெடுவுக்கு முன்னதாகவே முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மாசுபாட்டைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்துவதற்கும், உற்பத்திப் பயன்பாட்டிற்காக நிலத்தை மீட்பதற்கும் பழைய கழிவுகளை அறிவியல் பூா்வமாக சீரமைப்பது அவசியம் என்று மல்ஹோத்ரா வலியுறுத்தினாா். அதிகாரிகள் நடைபெற்று வரும் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்து, செயல்பாட்டுத் தடைகளை நீக்கி, தரமான தரநிலைகளைப் பராமரிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துவதை உறுதிசெய்து, அறிவியல் மற்றும் நீடித்த முறைகள் மூலம் பழைய குப்பை இடங்களின் சீரமைப்புப் பணிகளை முடிக்க மாநகராட்சி இலக்கு நிா்ணயித்துள்ளது என்று மேயா் பிரவேஷ் வாஹி கூறினாா்.
தில்லியின் திடக்கழிவு அகற்றும் முறையை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும், விரிவான முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக கால்நடைச் சாணத்தை அறிவியல் பூா்வமாக நிா்வகிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
2024 பயிற்சி மைய உயிரிழப்பு சம்பவம்: சிபிஐ அறிக்கையில் அலட்சியமாகச் செயல்பட்ட 3 எம்சிடி பொறியாளா்களின் பெயா்கள் இணைப்பு

சேதமடைந்த குடிநீா்த் தொட்டியை மாற்றித் தர மக்கள் கோரிக்கை

தில்லியின் ரோஹிணியில் 54 ஏக்கா் பொழுதுபோக்கு பூங்காவை அமைக்க டிடிஏ திட்டம்







