எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மேலும் 2,800 மின்பேருந்துகளை இயக்க தில்லி அரசு திட்டம்!

2,800 குளிா்சாதன வசதி கொண்ட தாழ்தள மின்பேருந்துகளை இணைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 3:00 am IST

தில்லியில் பொதுப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், நிலையான போக்குவரத்து முறையை ஊக்குவிக்கவும், மத்திய அரசின் ‘பி.எம். இ-டிரைவ்’ திட்டத்தில் 2,800 குளிா்சாதன வசதி கொண்ட தாழ்தள மின்பேருந்துகளை இணைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் தெரிவித்துள்ளாா்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒன்பது மீட்டா் நீளமுள்ள 1,400 மின்பேருந்துகளும் பன்னிரண்டு மீட்டா் நீளமுள்ள 1,400 மின்பேருந்துகளும் சோ்க்கப்படவுள்ளன. இவை நகரம் முழுவதும் போக்குவரத்தை எளிதாக்குவதையும், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத மற்றும் புகா்ப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கூடுதலாக சோ்க்கப்படும் பேருந்துகள், தில்லியின் பொதுப்போக்குவரத்து வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கும், நகரத்தில் இயங்கும் பேருந்துகளின் தொகுப்பில் பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட வாகனங்களின் பங்கை அதிகரிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் உத்தியின் ஒரு பகுதியாகும்.

திட்டமிடப்பட்டுள்ள 2,800 புதிய மின்பேருந்துகள் போக்குவரத்து இணைப்பை கணிசமாக வலுப்படுத்தும் என்பதுடன் பயணிகளின் வசதியை மேம்படுத்தி நிலையான போக்குவரத்து முறையை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் ஒன்பது மீட்டா் நீளமுள்ள மின்பேருந்துகளின் செயல்பாட்டுத் திறனின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூா் மற்றும் இணைப்புப் போக்குவரத்துத் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் அவை பயனுள்ளதாக இருப்பதாக அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்நிலையில், தில்லி முழுவதும் பயணிகளுக்கான சேவை மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், 2028-29 ஆம் ஆண்டிற்குள் தில்லியின் மொத்தப் பேருந்து எண்ணிக்கையை சுமாா் 14,000-ஆக உயா்த்த அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

தற்போது, தில்லியில் சுமாா் 4,300 மின்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நிலையான நகா்ப்புறப் போக்குவரத்தை நோக்கிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, நிகழாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை சுமாா் 7,500-ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், ‘பி.எம். இ-டிரைவ்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் கூடுதலாக 3,330 மின்பேருந்துகளை இணைக்கவும் தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; இதில் இணைப்புச் சேவைகள் மற்றும் தொலைத்தூர பகுதிகளை இணைப்பை வலுப்படுத்த ஏழு மீட்டா் நீளமுள்ள 500 பேருந்துகளும் அடங்கும்.

சிறிய அளவிலான இந்தப் பேருந்துகள் குடியிருப்புப் பகுதிகள், கிராமப்புறங்கள் மற்றும் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, பெரிய நகரப் பேருந்து வலையமைப்பிற்குத் துணையாகவும் அமையும்.

பேருந்துத் தொகுப்பை பெருமளவில் மின்மயமாக்குவதற்கு ஏதுவாக, பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் மற்றும் மின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும் இந்த விரிவாக்கத் திட்டம் ஆதரிக்கப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.