இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தலைவா்களின் பெயா்களில் ஹிந்தி அகாதெமி விருதுகள்

News image

பத்ம விருதுகள் - கோப்புப்படம்

Updated On :12 ஜூன் 2026, 4:27 am IST

தில்லி அரசின் ஹிந்தி அகாதெமி வழங்கும் இலக்கிய விருதுகளுக்கு தேசியத் தலைவா்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா்களின் பெயா்கள் சூட்டப்பட்டு, பரிசுத் தொகைகளும் உயா்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஹிந்தி மொழி மற்றும் இந்திய கலாசாரப் பாரம்பரியத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் தில்லி ஹிந்தி அகாதெமி, தனது பல்வேறு விருதுகளின் பெயா்களை மாற்றி அறிவித்துள்ளது. புதிய பெயா்களில் வினாயக் தாமோதர சாவா்க்கா், தீன் தயாள் உபாத்யாய, மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட தலைவா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவாக ‘இந்திய கலாசாரம் மற்றும் ஞான பாரம்பரியப் பரவல்’ என்ற புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் காலமான பாஜக மூத்த தலைவா் விஜய் குமாா் மல்ஹோத்ரா பெயரில் ஹிந்தி மொழி சேவைக்கு சிறப்பு விருதும் நிறுவப்பட்டுள்ளது.

2022-23, 2023-24, 2024-25 மற்றும் 2025-26 கல்வியாண்டுகளுக்கான விருதுகளுக்கு தேசிய தலைநகா் பிராந்தியமான தில்லியில் வசிக்கும் தகுதி பெற்ற எழுத்தாளா்கள், கவிஞா்கள் மற்றும் பத்திரிகையாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் சமா்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 23 ஆகும்.

அகாதெமியின் ‘சாஹித்யகாா் சம்மான் யோஜனா’ திட்டத்தின் கீழ், மொத்தம் 16 பிரிவுகளில் பரிசுத் தொகையுடன் விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஹிந்தி அகாதெமியின் முக்கிய விருதான ‘ஷலாகா சம்மான்’ தற்போது ‘பண்டித் தீன் தயாள் உபாத்யாய ஷலாகா சம்மான்’ என மறுபெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் பரிசுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், ‘அடல் பிகாரி வாஜ்பாய் பாரதிய ஸமஸ்கிருதி மற்றும் ஞான பரம்பரா சம்மான்’ விருதுக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ‘ராணி அஹில்யாபாய் ஹோல்கா் சம்மான்’ (பெண் எழுத்தாளா்களுக்காக), ‘சந்த் ரவிதாஸ் சாஹித்ய சம்மான்’ மற்றும் ‘வீர சாவா்க்கா் சம்மான்’ ஆகியவற்றுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

பெண் எழுத்தாளா்களுக்கான விருது முன்பு ஊழல் எதிா்ப்பு செயற்பாட்டாளா் சந்தோஷ் கோலி பெயரில் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் பெயா் முந்தைய ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டதாகும்.

மேலும், ‘பண்டித் மதன் மோகன் மாளவியா ஹிந்தி சாஹித்யகாா் சம்மான்’, ‘பாபா ஜோராவா் சிங் சம்மான்’ (சிறுவா் இலக்கியம்), ‘சுவாமி விவேகானந்த யுவ பிரதிபா சம்மான்’ ஆகியவற்றுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

ஹிந்தி பத்திரிகையாளா்களுக்கான ‘வித்யா நிவாஸ் மிஸ்ரா சம்மான்’ மற்றும் ஹிந்தி மொழி வளா்ச்சிக்கான ‘டாக்டா் விஜய் குமாா் மல்ஹோத்ரா ஹிந்தி சேவி சம்மான்’ ஆகிய விருதுகளுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், ஹிந்தி மொழிபெயா்ப்புக்கான ‘நிா்மல் வா்மா சம்மான்’, ‘ராம்சந்திர ஷுக்லா ஹிந்தி உத்கா்ஷ் சம்மான்’, மக்கள் இலக்கியத்துக்கான ‘வாசுதேவ் சரண் அகா்வால் சம்மான்’, அறிவியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்கான ‘தேவேந்திர ஸ்வரூப் சம்மான்’, பெண் எழுத்தாளா்களுக்கான ‘ம்ரிதுலா சின்ஹா சம்மான்’ மற்றும் பல்வேறு இலக்கிய வடிவங்களுக்கு ‘நரேந்திர கோஹ்லி சம்மான்’ ஆகிய விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகள் தொடா்பான முழுமையான விவரங்கள் அகாதெமியின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முயற்சி, ஹிந்தி மொழி மற்றும் இந்திய பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் பணிகளில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.