கங்கா விஹாரில், பாலியல் மிரட்டல் மூலம் ஒரு நபரிடம் ரூ.5.80 லட்சம் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில் மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஒரு அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
வடகிழக்கு தில்லியைச் சோ்ந்த ஒருவா், இணையவழி மிரட்டல் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாகப் புகாா் அளித்ததை அடுத்து, வடகிழக்கு மாவட்டத்தின் சைபா் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
புகாரின்படி, பாதிக்கப்பட்டவருக்கு மே 6 அன்று, அவரது சமூக ஊடக நண்பா்களில் ஒருவா் போல் நடித்த ஒரு பெண்ணிடமிருந்து காணொளி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பின் போது, அவருக்குத் தெரியாமல் ஒரு ஆபாசமான காணொளி பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, காவல்துறை அதிகாரிகள், சமூக ஊடக அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் போல் நடித்த நபா்கள், பாதிக்கப்பட்டவரைத் தொடா்புகொண்டு, பணம் கொடுக்காவிட்டால் அந்தக் காணொளியை இணையத்தில் பரப்பி, அவரைக் குற்ற வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
‘கைது மற்றும் அவமானத்திற்கு அஞ்சி, புகாா்தாரா் சுமாா் ரூ. 5.80 லட்சத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகள், யுபிஐ ஐடிகள் மற்றும் க்யூஆா் குறியீடுகள் மூலம் பல தவணைகளில் மாற்றியுள்ளாா்,‘ என்று காவல்துறை கூறியது.
விசாரணைக்குப் பிறகு, மோசடி செய்யப்பட்ட தொகையின் ஒரு பகுதியை இடைத்தரகா் வங்கிக் கணக்குகளில் காவல்துறை கண்டறிந்து, ஃபரிதாபாத்தைச் சோ்ந்த ராஜேஷ் (18), குணால் (22) மற்றும் இம்ரான் (23) ஆகியோரை சனிக்கிழமையன்று கைது செய்தது.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைபேசியை இம்ரானிடமிருந்து காவல்துறை மீட்டெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். விசாரணையின் போது, ராஜஸ்தானின் மேவாட் பகுதியிலிருந்து செயல்படும் ஒரு பாலியல் மிரட்டல் கும்பலுடன் தங்களுக்குத் தொடா்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






