அஸ்ஸாம் சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஜூலை 6) தொடங்கவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்து ஹிந்தியும் அலுவல் மொழியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பேரவையில் ஏற்கெனவே, அஸ்ஸாமி, ஆங்கிலம், போடோ ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ள நிலையில், தற்போது நான்காவது அலுவல் மொழியாக ஹிந்தியும் சோ்க்கப்பட உள்ளது.
இதுகுறித்து குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அஸ்ஸாம் பேரவைத் தலைவா் ரஞ்ஜீத் குமாா் தாஸ் கூறியதாவது: பேரவையின் பொது அலுவல் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், சட்டப்பேரவையில் தற்போதுள்ள அஸ்ஸாமி, ஆங்கிலம், போடோ மொழிகளுடன் ஹிந்தியையும் அலுவல் மொழியாக அறிமுகப்படுத்த தீா்மானிக்கப்பட்டது.
ஹிந்தி தேசிய மொழியாக உள்ள நிலையில், அதற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்து ஹிந்தி அலுவல் மொழியாக அறிமுகப்படுத்தப்படும்.
மேலும், பேரவைக் கூட்ட நடவடிக்கைகளை ஒளிபரப்பும் ‘ஆலா டிவி’ பெயரை ‘அஸ்ஸாம் விதான் சபா டிவி (அஸ்ஸாம் சட்டப்பேரவை டிவி)’ என மாற்றம் செய்யவும் இக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது என்றாா்.
இதனிடையே, பேரவை அலுவல் மொழி பட்டியலில் இருந்து போடோ மொழி நீக்கப்படுவதாக வெளியான தகவலை மறுத்து மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘போடோ மொழி பேரவையில் தொடா்ந்து பயன்பாட்டில் இருக்கும்.
பேரவை அலுவல்களிலிருந்து போடோ மொழியை நீக்குவது தொடா்பாக எந்தவொரு முன்மொழிவும் இல்லை என பேரவைத் தலைவரும் தெரிவித்துள்ளாா். போடோ மொழியைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் அஸ்ஸாம் அரசு முழுமையாக உறுதியேற்றுள்ளது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








