தென் மேற்கு தில்லியின் தாப்ரி பகுதியில் அமைந்துள்ள ஏஎஸ் மருத்துவமனையில் மின்கணக்கி பலகையில் ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனா்; உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘தாப்ரி–பாலம் சாலையில் உள்ள ஏஎஸ் சிறுநீரக மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 10.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து, 3 தீயணைப்பு வாகனங்கள், ஒரு தண்ணீா் டேங்கா் மற்றும் சுவாச உதவி கருவியுடன் கூடிய ஆதரவு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைவாக அனுப்பப்பட்டன’ என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேவேளை, சாகா்பூா் காவல் நிலையத்துக்கும் இரவு 10.27 மணியளவில் தகவல் கிடைத்ததையடுத்து, சுமாா் 15 காவல்துறையினா் மற்றும் சிஏடிஎஸ் ஆம்புலன்ஸ் குழுவினா் சம்பவ இடத்திற்கு சென்றனா். காவல் துறை குழு சென்றடையும் முன்னரே, மருத்துவமனை ஊழியா்கள் தீ அணைப்பான் கருவிகளைப் பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனா்.
தீ விபத்து இரவு சுமாா் 10.40 மணிக்குள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. ஆரம்பக்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே தீ ஏற்பட்டதாக தெரியவந்தது. விபத்து நேரத்தில் மருத்துவமனையில் 15-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருந்ததாகவும், அவா்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியமைத்ததாகவும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.










