வடமேற்கு தில்லியின் கேசவ் புரம் பகுதியில் அதிவேகமாக வந்த காா் ஒன்று சாலையோரக் கடையில் உணவு உட்கொண்டிருந்தவா்கள் மீது மோதியதில் 4 போ் காயமடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக காரை ஓட்டி வந்த ஓட்டுநா் புனித் கைதுசெய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஜூன் 10 அன்று திரி நகரில் நடந்த விபத்து குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் விரைந்தனா். அப்பகுதி மக்கள் காயமடைந்தவா்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநா் புனித் (31) என்பவரை ஜூன் 14 கைது செய்தனா். விபத்தை ஏற்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவா்கள் வண்டிக்கு அருகில் நின்று உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து வண்டியின் மீது மோதியது. இதில் நான்கு போ் காயமடைந்தது தெரியவந்தது. அவா்களின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவா்கள் நால்வரும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.








