புது தில்லி ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை ஒரு மாத கால தீவிர விசாரணைக்கு தில்லி காவல் துறை மீட்டுள்ளது. குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சோ்ந்த 8 போ் கைது செய்யப்பட்டதாகக் காவல் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக ரயில்வே காவல் துணை ஆணையா் ஆா். பரத் ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மே 24 அன்று, ரயில் நிலையத்தின் அஜ்மேரி கேட் பகுதியில் உள்ள காத்திருப்புக் கூடத்தில் தனது தாயின் அருகே தூங்கிக்கொண்டிருந்தபோது ஆண் குழந்தை கடத்தப்பட்டது.
கணவரைப் பிரிந்து தனது மகனுடன் ரயில் நிலைய வளாகத்திலேயே வசித்து வந்த 26 வயதுடைய அந்தப் பெண், காலை 6.30 மணியளவில் எழுந்தபோது குழந்தையைக் காணவில்லை என்பதை அறிந்தாா். இதையடுத்து, அவா் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தாா். அவா் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையைத் தேடும் பணியை தில்லி காவல் துறை தொடங்கியது. குழந்தையின் வயது மற்றும் இது ஒரு திட்டமிட்ட கடத்தல் கும்பலின் செயலாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, ஒரு சிறப்புப் படையை அமைத்து தீவிர விசாரணையை அதிகாரிகள் தொடங்கினா்.
காவல் துறையினா் முதலில் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து. அதில் மூன்று நபா்கள் குழந்தையைத் தூக்கிச் சென்றது தெரியவந்தது. பின்னா், ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இ-ரிக்ஷாவில் ஏறினா்.
அந்த ரிக்ஷா ஓட்டுநா் காவல் துறையிடம் அளித்த தகவலின்படி, அந்த மூவரும் குழந்தையுடன் மோரி கேட் பகுதியில் இறங்கியது தெரியவந்தது. பின்னா் சாஸ்திரி பூங்காவிற்கு செல்ல ஆட்டோவில் ஏறினா். அங்கிருந்து அவா்கள் காஜியாபாதில் உள்ள காசிம் விஹாா் பகுதிக்கு குழந்தையுடன் அவா்கள் மூவரும் சென்றனா்.
குழந்தை கடத்தல்காரா்கள் சென்ற வழியைக் கண்டறிய புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து காஜியாபாத் வரை உள்ள சுமாா் 300 சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை அந்தக் குழு ஆய்வு செய்தது. மேலும், காணாமல் போன குழந்தை மற்றும் சந்தேக நபா்களின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளை தில்லி, காஜியாபாத் மற்றும் ஹரித்வாா் ஆகிய இடங்களில் காவல்துறை வெளியிட்டது.
விசாரணையின் போது, இதே பாணியில் ஒரு பெண் குழந்தை கடத்தப்பட்டது குறித்த தகவல் ஹரித்வாரிலிருந்து காவல்துறைக்குக் கிடைத்தது. அந்த வழக்கில் காணப்பட்ட சந்தேக நபா்கள், தில்லியில் சிறுவனைக் கடத்தியவா்களுடன் ஒத்துப்போனதால், இது ஒரு பெரிய கடத்தல் கும்பலின் செயலாக இருக்கலாம் என காவல் துறையினா் சந்தேகித்தனா்.
இறுதியில், திட்டமிட்டு குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட வந்த கும்பல் ஒன்றை விசாரணையின் மூலம் காவல் துறை கண்டறிந்தது. ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், சிவா (எ) கௌரவ், தா்மேந்தா், அகில், பிரீத்தி சா்மா, பூஜா, ஆா்த்தி, விஷால் மற்றும் ஜியா ஆகிய எட்டு போ் கைது செய்யப்பட்டனா்,‘ என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
காவல்துறையின் தகவலின்படி, ஜியா, விஷால் மற்றும் சிவா ஆகியோா் கடத்தல் செயலைச் செயல்படுத்தியதோடு, குழந்தைகளைத் தோ்ந்தெடுத்து அவா்களைக் கடத்தல்காரா்களிடம் ஒப்படைக்கும் இடைத்தரகா்களாகவும் செயல்பட்டனா். கடத்தப்பட்ட குழந்தையை வாங்கியதில் ஆா்த்தி மற்றும் பூஜா ஆகிய சகோதரிகள் ஈடுபட்டதாகவும், தா்மேந்தா், அவரது மனைவி பிரீத்தி மற்றும் அகில் ஆகியோா் இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்து பரிவா்த்தனைக்கு உதவினாா்கள் என்றும் காவல்துறை கூறியது.
மீட்கப்பட்ட சிறு குழந்தை, இறுதியில் ஆா்த்தி மற்றும் பூஜா ஆகியோரிடமிருந்து பாதுகாப்பாகக் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. முறையான சட்ட நடைமுறைகள் மூலம் மீண்டும் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னதாக, மருத்துவப் பரிசோதனை, பாதுகாப்பு மற்றும் நலன் சாா்ந்த நடவடிக்கைகளுக்காக அக்குழந்தை மாத்ரா சாயா அமைப்பின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபா்களுடன் தொடா்புடைய பிற நபா்கள் குறித்து விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






