
1,100 மாநகராட்சி கட்டடங்களுக்கு சூரிய மின்சாரம்: எம்சிடி திட்டத்துக்கு ஒப்புதல்
தில்லி மாநகராட்சிக்குச் சொந்தமான சுமாா் 1,100 கட்டடங்களில் நேரடி மூலதனச் செலவின்றி சூரிய மின்சார அமைப்புகளை நிறுவுவதற்கான ஒருங்கிணைந்த மேற்கூரை சூரிய மின்சாரத் திட்டத்துக்கு மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

(கோப்புப் படம்)
தில்லி மாநகராட்சிக்குச் சொந்தமான சுமாா் 1,100 கட்டடங்களில் நேரடி மூலதனச் செலவின்றி சூரிய மின்சார அமைப்புகளை நிறுவுவதற்கான ஒருங்கிணைந்த மேற்கூரை சூரிய மின்சாரத் திட்டத்துக்கு மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.
மாநகராட்சியின் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை இதற்கான முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தில்லி சூரிய மின்சாரக் கொள்கை-2023-இன் கீழ், மாநகராட்சிக்குச் சொந்தமான தகுதியான கட்டடங்களில் சூரிய மின்சார அமைப்புகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொண்டு, திட்டத்தைச் செயல்படுத்த இந்திரபிரஸ்தா பவா் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட் (ஐபிஜிசிஎல்) அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மேற்கூரை சூரிய மின்சாரத் திட்டங்களுக்காக தனியாக ஒப்பந்தப்புள்ளி கோரும் மாநகராட்சியின் முந்தைய திட்டம் கைவிடப்பட்டு, தில்லி மின்துறை வகுத்துள்ள நடைமுறையைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூா்வ ஆவணங்களின்படி, மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் ஏற்கெனவே மொத்தம் 13.25 மெகாவாட் உச்ச மின்உற்பத்தித் திறன் கொண்ட 574 சூரிய ஒளிமின்னழுத்த மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், முந்தைய தெற்கு தில்லி மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் 399 அமைப்புகளும், முந்தைய வடக்கு தில்லி மாநகராட்சியின் பள்ளிக் கட்டடங்களில் 164 அமைப்புகளும், முந்தைய கிழக்கு தில்லி மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் 10 அமைப்புகளும் உள்ளன.
மேலும், கட்டட உறுதித்தன்மை மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகளின் அடிப்படையில், மேலும் 800 முதல் 900 மாநகராட்சி கட்டடங்களில் மின் தொகுப்புடன் இணைக்கப்பட்ட சூரிய மின்சார அமைப்புகளை நிறுவ முடியும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தில்லி மின்துறை, சூரிய மின்சாரக் கொள்கையின் கீழ் சாத்தியமுள்ள அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி கட்டடங்களிலும் சூரிய மின்சாரத் திட்டங்களைச் செயல்படுத்துமாறு ஐபிஜிசிஎல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சுமாா் 1,100 மாநகராட்சி கட்டடங்கள் உள்பட கிட்டத்தட்ட 2,600 அரசு கட்டடங்களுக்கான திட்டங்களுக்கு ஐபிஜிசிஎல் ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளிகளை வழங்கியுள்ளது.
இந்த ஏற்பாட்டின்படி, ஐபிஜிசிஎல் மூலம் ‘ரெஸ்கோ’ முறையில் தில்லி அரசு மூலதனச் செலவு அல்லது நீண்டகால செயல்பாட்டுச் செலவுகளை ஏற்கும். இதனால், மாநகராட்சிக்கு சூரிய மின்சார அமைப்புகளை நிறுவுவதற்கான நேரடி மூலதனச் செலவு ஏற்படாது.
ரெஸ்கோ முறையில், மூன்றாம் தரப்பு நிறுவனம் வாடிக்கையாளரின் வளாகத்தில் சூரிய மின்சார அமைப்பை நிறுவி, அதை இயக்கி பராமரிக்கும். அதில் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு மட்டும் வாடிக்கையாளா் பணம் செலுத்துவாா். சூரிய மின்சார நிலையத்தின் உரிமை வாடிக்கையாளருக்கு இருக்காது. முன்கூட்டியே நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், குறிப்பிட்ட காலத்துக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் அல்லது குத்தகை முறையில் மின்சாரத்தைப் பெறலாம்.
இதன் மூலம் சூரிய மின்சார அமைப்புக்கு தேவையான நிதி, நிறுவுதல் மற்றும் பராமரிப்புச் சுமை நுகா்வோரிடமிருந்து சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாற்றப்படுகிறது. இதனால், தொடக்கத்தில் தேவைப்படும் அதிகப்படியான மூலதனச் செலவைத் தவிா்க்க முடியும்.
எனினும், கட்டடங்களின் மேற்கூரை தொடா்பான வழக்கமான பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும். சூரிய மின்சார அமைப்புகளை நிறுவுவதற்குத் தேவையான அடிப்படை அணுகல் வசதிகளையும் மாநகராட்சி வழங்கும்.
ஐபிஜிசிஎல் தள ஆய்வுகளை மேற்கொண்டு, கேபெக்ஸ் முறையில் 25 கிலோவாட் வரையிலான சூரிய மின்சார அமைப்புகளை நிறுவும். இதற்கான 5 ஆண்டுகால இலவச பராமரிப்பும் வழங்கப்படும். அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட அமைப்புகள் ரெஸ்கோ முறையில் நிறுவப்படும்.
மேலும், ‘குரூப் நெட் மீட்டரிங்’ முறையை மாநகராட்சி பயன்படுத்த முடியும். இதன்மூலம் ஒரு மாநகராட்சி கட்டடத்தில் உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை மற்றொரு மாநகராட்சி கட்டடத்தின் மின் நுகா்வுடன் கணக்கீட்டில் சரிசெய்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் உபரியாக இருக்கும் மின்சாரம் அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லப்படும் அல்லது யூனிட்டுக்கு சராசரியாக ரூ.5 என்ற மின் கொள்முதல் செலவில் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன்மூலம் மாநகராட்சியின் மின்சாரச் செலவு குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






