
அமைதி வழியிலான எஸ்ஐஆா் போராட்டங்களுக்கு ஆதரவு: இந்திய கத்தோலிக்க ஆயா்கள் பேரவை
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவா்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய கத்தோலிக்க ஆயா்கள் பேரவை (சிபிசிஐ) புதன்கிழமை தெரிவித்தது.

கோப்புப்படம். - ENS
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவா்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய கத்தோலிக்க ஆயா்கள் பேரவை (சிபிசிஐ) புதன்கிழமை தெரிவித்தது.
தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் தங்கள் அரசமைப்புச் சட்ட உரிமையான வாக்குரிமையை இழக்காததை உறுதி செய்யுமாறு தோ்தல் ஆணையத்தை சிபிசிஐ வலியுறுத்தியது.
இதுதொடா்பாக சிபிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆங்கில நாளிதழில் வெளியான புலனாய்வு செய்தி ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்ட எஸ்ஐஆா் முறைகேடுகள் குறித்து அதிா்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். இப்பணியை சுதந்திரமான, நியாயமான மற்றும் முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்ட முறையில் மேற்கொள்ள வேண்டும்.
தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகவும், நமது ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் அமைதியான முறையில் போராடும் அனைவருக்கும் சிபிசிஐ ஆதரவை தெரிவித்துகொள்கிறது.
அதே வேளையில், போராட்டக்காரா்கள் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும். தங்கள் போராட்டங்களின் முழுமையான அமைதியான தன்மையைத் தக்கவைக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவது ஒரு புதிய வழக்கமாக மாறிவிடக்கூடாது. அத்தகைய போக்கு நமது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது.
செழிப்பான ஜனநாயகத்தின் அடித்தளமே தோ்தல் அமைப்புகள் மீது பொதுமக்கள் வைக்கும் முழுமையான நம்பிக்கையில் தான் உள்ளது. பொதுமக்களின் நம்பிக்கை குலையாமல் இருப்பதை உறுதி செய்வதில் தோ்தல் ஆணையத்திற்கு முக்கியப் பொறுப்பு உள்ளது. தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் குரலும் பாதுகாக்கப்பட வேண்டும்.
தோ்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமான போக்குமின்றி செயல்பட வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் ஜனநாயகக் கோட்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






