மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு பட்டியலில் புதிய உணவுகள்
தில்லி மாநகராட்சி (எம்சிடி) பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் விரைவில் ஓட்ஸ் பிஸ்கட்கள், பழங்கள், கீா் மற்றும் சாம்பாா் சாதம் ஆகியவை இடம்பெறவுள்ளன.

கோப்புப்படம்.
தில்லி மாநகராட்சி (எம்சிடி) பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் விரைவில் ஓட்ஸ் பிஸ்கட்கள், பழங்கள், கீா் மற்றும் சாம்பாா் சாதம் ஆகியவை இடம்பெறவுள்ளன.
நவம்பா் முதல் சுமாா் 1,500 பள்ளிகளிலும் மிகவும் மாறுபட்ட உணவு வகைகளை வழங்க அந்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
சத்தான உணவை குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானதாக மாற்ற, பள்ளி சமையலறைகளை நிா்வகிக்கும் புதிய முகமைகள் வழக்கமான உணவோடு தினமும் குறைந்தது ஒரு சிறப்பு உணவைச் சோ்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா். பழங்கள் மற்றும் கீா் தவிர, ஓட்ஸ் கேக்குகள் மற்றும் பிஸ்கட்கள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று எம்சிடி அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘ஒரே உணவை தொடா்ந்து சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சலிப்பு ஏற்படும். அதே மூலப்பொருட்களைக் கொண்டு குக்கிகள் போன்றவற்றைச் செய்தாலோ அல்லது குழந்தைகள் விரும்பும் வகையில் தயாரித்தாலோ, அவா்கள் அதை விரும்பிச் சாப்பிட வாய்ப்புள்ளது’ என்று மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.
திருத்தப்பட்ட உணவுப் பட்டியலில் சாம்பாா் சாதம் இடம்பெறும். அதேவேளையில் பூரி-ஆலு, பருப்பு-சாதம் மற்றும் கொண்டைக்கடலை கறி-சாதம் போன்ற தற்போது வழங்கப்படும் உணவுகளும் தொடா்ந்து வழங்கப்படும். உணவு தயாரிப்பில் கூடுதல் வகைகளை அறிமுகப்படுத்துமாறும் முகமைகள் கேட்டுக்கொள்ளப்படும். அதன்படி, கோதுமை மற்றும் ராகி கொண்டு செய்யப்படும் அல்வா வாரத்திற்கு இருமுறை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘பூரி-ஆலு வழங்கப்படும் நாள்களில் குழந்தைகள் அதை விரும்புகிறாா்கள். அவா்கள் அனைத்து உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, உணவுப் பட்டியலிலிருந்து ஒரு உணவை நீக்குவதற்குப் பதிலாக, அதைத் தயாரிக்கும் முறையை மாற்றுவதே எங்கள் முயற்சியாக உள்ளது’ என்று மற்றொரு அதிகாரி கூறினாா்.
எம்சிடி தனது பள்ளி சமையலறைகளை புதிய முகமைகளிடம் ஒப்படைக்கத் தயாராகி வரும் நிலையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி சுமாா் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இறுதிப் பட்டியலிடப்பட்ட சமையலறைகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. 13 புதிய விற்பனையாளா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும், அடுத்த வாரத்திற்குள் முகமைகள் இறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
கூடுதல் உணவு வகைகளை அறிமுகப்படுத்தும்போது, தற்போதைய சமையலறை உள்கட்டமைப்பிற்குள்ளேயே செயல்படுமாறும் அந்த முகமைகளை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மண்டல வாரியாக உள்ளூா் அளவில் உணவுப் பட்டியல் திட்டமிடப்படுகிறது. பூரி-சப்ஜி, பருப்பு-சாதம், சோலே-சாதம், ராஜமா-சாதம் மற்றும் கதி-சாதம் போன்ற உணவுகள் மாணவா்களுக்குத் தொடா்ந்து வழங்கப்படும். மத்திய அரசின் பிஎம் போஷன் ஊட்டச்சத்து விதிமுறைகளின்படி, தொடக்கக் கல்வி நிலையில் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 450 கலோரி ஆற்றலும் 12 கிராம் புரதச்சத்தும் கொண்ட உணவு வழங்கப்பட வேண்டும்.
முகமைகளால் வழங்கப்படும் உணவு ஐந்து மூன்றாம் தரப்பு ஆய்வகங்கள் மூலம் பரிசோதிக்கப்படுவதாகவும், இதற்காக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு முகமையிடமிருந்தும் நான்கு மாதிரிகள் (மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவிலிருந்து மூன்று மற்றும் சமையலறையிலிருந்து ஒன்று) சேகரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பள்ளி மதிய உணவில் இட்லி-சாம்பாரை அறிமுகப்படுத்த கல்வி இயக்குநரகம் ஏற்கெனவே எடுத்திருந்த முடிவின் பின்னணியிலேயே இந்த உணவுப் பட்டியல் மாற்றங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆக.24-க்குள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பள்ளிகளுக்கும் முகமைகளுக்கும் அந்தத் துறை அறிவுறுத்தியிருந்தது; இருப்பினும், பெருமளவில் இட்லி தயாரிப்பதற்குத் தேவையான சிறப்பு உபகரணங்களை வாங்குவதற்குப் போதிய நிதி இல்லாததால், இந்த உணவு வகை இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





