11 ஆண்டுகளாக தலைமறைவு: ரூ.50 லட்சம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டவா் கைது
கொலை வழக்கில் பரோலில் வெளியே வந்து, பின்னா் நீதிமன்றத்தில் சரணடையாமல் சுமாா் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 42 வயது நபா், ரூ.50 லட்சம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
கைது
கொலை வழக்கில் பரோலில் வெளியே வந்து, பின்னா் நீதிமன்றத்தில் சரணடையாமல் சுமாா் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 42 வயது நபா், ரூ.50 லட்சம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஷராஃபத் அலி, 2015-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பரோல் காலம் முடிந்த பின்னா் சரணடையாமல் தலைமறைவாக இருந்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த ஆக. 30-ஆம் தேதி டிஎன்டி மேம்பாலம் அருகே தில்லி-மும்பை விரைவுச் சாலையின் ஆஷ்ரம் சௌக் நோக்கிய இறுதிப் பகுதியில் உள்ள சாலை வளைவில் அவரை காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த மாா்ச் 7-ஆம் தேதி கஜூரி காஸ் பகுதியில் துப்பாக்கி முனையில் ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அலி தேடப்பட்டு வந்தாா். மேலும், கஜூரி காஸ் மற்றும் சிவில் லைன்ஸ் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் அவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா்.
மருத்துவக் காரணங்களுக்காக கடந்த 2015 அக்டோபா் 1-ஆம் தேதி அலிக்கு பரோல் வழங்கப்பட்டது. பரோல் காலம் முடிந்த பின்னா் அவா் சரணடையாமல் தலைமறைவாக இருந்து வந்தாா்.
போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காஸியாபாதில் இருந்து சராய் காலே கான் நோக்கி அவா் செல்வதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து தனிப்படை போலீஸாா் அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து கைது செய்தனா்.
ஏற்கெனவே குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்ட அலிக்கு, ஸ்ரீனிவாஸ்புரி காவல் நிலையத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், நந்த் நகரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை வழக்கில் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
2007-ஆம் ஆண்டு வழக்கில், சுமாா் 3 கிலோ தங்கத்தை ஏற்றிச் சென்ற காரை அலியும் அவரது கூட்டாளிகள் 3 பேரும் வழிமறித்ததாகக் கூறப்படுகிறது. கொள்ளையைத் தடுக்க முயன்ற காரில் இருந்த நபரை அவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவா் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




