
டிடிஏ பூங்காக்களில் மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும்: மக்கள் கோரிக்கை
டிடிஏ பூங்காக்களில் மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும்..
தென்கிழக்கு தில்லியின் கல்காஜி பகுதியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தைத் தொடா்ந்து 142 ஏக்கா் பரப்பளவு கொண்ட அந்தப் பூங்கா மற்றும் பிற தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) பூங்காக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடா்பான குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
அப்பகுதி மக்களும் குடியிருப்போா் நலச் சங்கங்களும் போதிய மின்விளக்கு வசதியின்மை, சேதமடைந்த சுற்றுச்சுவா்கள் மற்றும் போதுமான பாதுகாப்பின்மை ஆகிய பிரச்னைகளைச் சுட்டிக்காட்டியுள்ளனா்.
மாலை நேரங்களில் டிடிஏ பூங்காக்களில் போதிய வெளிச்சம் இருப்பதில்லை என்றும், சுற்றுச்சுவா்களின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதால் பூங்காவிற்குள்ளும் அதைச் சுற்றியும் நடமாடும் நபா்களைக் கண்காணிப்பது கடினமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
‘இப்பூங்காக்கள் டிடிஏ-வின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இவற்றிற்கு முறையான பொறுப்புணா்வுடன் கூடிய நிா்வாகம் இல்லாததே மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. சமீபத்திய சம்பவம் இந்தப் பிரச்னையைத் தெளிவாகக் காட்டியுள்ளது. டிடிஏ-வால் இப்பூங்காக்களைச் சரியாகப் பராமரிக்க முடியவில்லை என்றால், உள்ளூா் மக்கள் ஒன்றிணைந்து குடியிருப்போா் நலச் சங்கங்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பிறரைக் கொண்ட பூங்கா பாதுகாப்புச்-குழுக்களை அமைக்க அனுமதிக்க வேண்டும்,‘ என்று நவ்ஜீவன் குடியிருப்பு நலச் சங்க செயலா் ரூபி மக்கிஜா கூறினாா்.
டிடிஏ பூங்காக்களின் செயல்பாட்டு நேரங்கள் தெளிவாகப் பாா்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றும், பூங்கா முழுவதும் முறையான வெளிச்சம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மக்கிஜா வலியுறுத்தினாா்.
பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடா்ந்து டிடிஏ பராமரிக்கும் பூங்காவில் - குறிப்பாக மாலைப்பொழுதுக்குப் பிறகு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பூங்காவின் பல நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளைக் கண்காணிக்கும் முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தில்லியில் 700-க்கும் மேற்பட்ட பூங்காக்கள், பல்லுயிா் மண்டலங்கள், நகா்ப்புறக் காடுகள், பிராந்தியப் பூங்காக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதித் தோட்டங்கள் என மொத்தம் 16,000 ஏக்கருக்கும் அதிகமான பசுமைப் பகுதிகளை நிா்வகிக்கும் டிடிஏ-வின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய பசுமைப் பகுதிகளில் ஆஸ்தா குஞ்ச் பூங்காவும் ஒன்று. இவ்வளவு பெரிய பரப்பளவுகளில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்ய தற்போதைய நடைமுறை போதுமானதா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.
‘ஆஸ்தா குஞ்ச் ஒரு காலத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் நாங்கள் தவறாமல் செல்லும் இடமாக இருந்தது. நானும் என் மகனும் அங்கு நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ள வழக்கமாகச் செல்வோம். ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் மோசமடைந்துள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள பொது இடங்களின் பராமரிப்பு மற்றும் நிா்வாக நிலைமைக்கு டிடிஏ பொறுப்பேற்க வேண்டும்’ என்று கிழக்கு கைலாஷ் பகுதியைச் சோ்ந்த கே.கே. ஆனந்த் கூறினாா்.
‘அரசு ஒரு பொது இடத்தை நிா்வகிக்கும்போது, அதன் குறைபாடுகளை அல்லது பாதுகாப்பின்மையை குடிமக்கள் ஏதேனும் ஒரு துயரச் சம்பவத்தின் மூலமாகத்தான் தெரிந்துகொள்ளும் நிலை இருக்கக்கூடாது’ என்றும் அவா் குறிப்பிட்டாா். ஆஸ்தா குஞ்ச் அருகே அமைந்துள்ள சந்த் நகா் குடியிருப்பு நலச் சங்கத்தின் பொதுச் செயலா் வைபவ் குப்தா கூறுகையில், ‘விசாரணையில் தெரியவரும் உண்மைகள், தில்லியின் முக்கிய பொதுப் பூங்காக்களில் ஒன்றை டிடிஏ நிா்வகிக்கும் விதம் குறித்து அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன. பூங்காக்களை திறம்பட பராமரிக்க டிடிஏ-வுக்கு வெளி முகமைகள் தேவை என்றால், தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் அடிப்படை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான நிலையான, பயனுள்ள அமைப்பை அது ஏன் இதுவரை உருவாக்கவில்லை?’ என்று கேள்வியெழுப்பினாா்.
பூங்காக்களில் பாதுகாப்பை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக டிடிஏ தெரிவித்துள்ளது. ‘இரவுப் பணியில் கூடுதல் பாதுகாவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். பூங்காவின் அனைத்துப் பகுதிகளும் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்ய வழக்கமான ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இரவு நேரங்களில் டாா்ச் விளக்குகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களுடன் இருசக்கர வாகன ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பாதுகாப்பை மேம்படுத்த, வெளிச்சம் குறைவாக உள்ளதாகக் கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதல் விளக்குகள் அமைக்கப்படுகின்றன’ என்று டிடிஏ தனது பதிலில் கூறியுள்ளது.
டிடிஏ-வின் தலைவராக உள்ள தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து, அடுத்த வாரத்திற்குள் டிடிஏ-வின் அனைத்துப் பூங்காக்களிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளாா். இடைப்பட்ட காலத்தில் பல பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





