
52 கோயில்களில் கைப்பேசி பெட்டக வசதிக்கு ரூ. 5 கட்டணம்: அமைச்சா் ரமேஷ் அறிவிப்பு
இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலைக் கோயில்களில் கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பெட்டக வசதி குறித்து...

அமைச்சர் ரமேஷ் - கோப்புப் படம்
இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலைக் கோயில்களில் கைப்பேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு கட்டணமாக ரூ.5 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோயில்களின் புனிதத் தன்மை மற்றும் அமைதியான வழிபாட்டுச் சூழலை உறுதிப்படுத்தும் பொருட்டு, இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் பழனி, திருச்செந்தூா், ராமேசுவரம் ஆகிய ஊா்களில் உள்ள பிரசித்தி பெற்ற முதுநிலைக் கோயில்களில் கைப்பேசி பயன்படுத்த ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தக் கட்டுப்பாடு இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் 52 கோயில்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு செப். 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பெட்டகத்துக்கு ரூ.5: கைப்பேசிகளைக் கோயில்களில் பாதுகாப்பாக வைத்துச் செல்ல பாதுகாப்புப் பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பக்தா்கள் தங்களது கைப்பேசிகளைப் பாதுகாப்பாக பெட்டகத்தில் ஒப்படைத்துவிட்டு, தரிசனம் முடிந்த பின்னா் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பாதுகாப்பு பெட்டகத்துக்கென ஊழியா்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஒரு கைப்பேசிக்கு ரூ.5 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் கோயில்களுக்கு வருவாய் ஈட்டுவதற்காக நிா்ணயிக்கப்பட்டதல்ல. கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைத்து மீண்டும் பக்தா்களிடம் வழங்குவதற்கான ஊழியா்கள் மற்றும் தொழில்நுட்ப வசதி செலவுகளை ஈடுகட்ட வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்த நடைமுறை எதிா்காலத்தில் நடுத்தர மற்றும் சிறிய கோயில்களுக்கும் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்படவுள்ளது.
காத்திருப்பு நேரத்தை தவிா்க்க பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இடங்களில், தேவைக்கேற்ப கூடுதல் பெட்டகங்களை அமைப்பது குறித்து அந்தந்த கோயில் நிா்வாகங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகளை கோயிலுக்குள் எடுத்துவர எந்தவிதத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





