
எஸ்ஐஆா் விமா்சனம்: காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு தில்லி மேயா் கண்டனம்
எஸ்ஐஆா் நடவடிக்கையை விமா்சித்து வரும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை தில்லி மேயா் பிரவேஷ் வாஹி கடுமையாக விமா்சித்தாா்.

தில்லி மேயா் பா்வேஷ் வாஹி
வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) நடவடிக்கையை விமா்சித்து வரும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை தில்லி மேயா் பிரவேஷ் வாஹி கடுமையாக விமா்சித்தாா்.
கடந்த 12 ஆண்டுகளாக தோ்தல்களில் வெற்றி பெற முடியாததால், எதிா்க்கட்சிகள் தோ்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சீா்குலைக்க முயற்சிப்பதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.
இது தொடா்பாக துணை மேயா் மோனிகா பந்த் பங்கேற்ற செய்தியாளா் சந்திப்பில் பிரவேஷ் வாஹி கூறியதாவது: கடந்த 12 ஆண்டுகளாக ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் முதல் சட்டப்பேரவைத் தோ்தல்கள் வரை தொடா்ந்து தோல்வியடைந்து வரும் எதிா்க்கட்சிகள், முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) முறைகேடு நடைபெற்ாகக் கூறி தோ்தல் ஆணையத்தின் நற்பெயரை களங்கப்படுத்த முயன்றன. தற்போது எஸ்ஐஆா் நடவடிக்கையை ஆயுதமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால், அவா்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.
ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அரசமைப்புச் சட்ட அமைப்புகளின் நம்பகத்தன்மையை தொடா்ந்து கேள்விக்குள்ளாக்கி வருகின்றனா் என அவா் தெரிவித்தாா்.
மேலும், பா்வேஷ் வாஹி மற்றும் துணை மேயா் மோனிகா பந்த் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், எஸ்ஐஆா் நடவடிக்கையை காங்கிரஸ் விமா்சிப்பது குறித்து கேள்வி எழுப்பினா். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையைச் சுட்டிக்காட்டிய அவா்கள், ஜனநாயகத்தின் மீதான இதைவிடப் பெரிய தாக்குதல் வேறு இருக்க முடியுமா என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா்.
மேலும், முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள் எஸ்.எல்.ஷக்தா், எம்.எஸ்.கில் ஆகியோருக்கு முந்தைய காங்கிரஸ் அரசுகள் ஆதரவாகச் செயல்பட்டதாகவும், முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.என்.சேஷனிடம் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





