குற்றாலத்தை அழகுபடுத்த ரூ.8 கோடியில் "மாஸ்டர் பிளான்'

திருநெல்வேலி, ஜூலை 31: தென்னகத்தின் "ஸ்பா' என அழைக்கப்படும் குற்றாலத்தின் அழகுக்கு அழகு சேர்க்க ரூ.8 கோடி மதிப்பிலான பெருந்திட்டத்தை (ஙஅநபஉத டகஅச) செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  சுற
Updated on
2 min read

திருநெல்வேலி, ஜூலை 31: தென்னகத்தின் "ஸ்பா' என அழைக்கப்படும் குற்றாலத்தின் அழகுக்கு அழகு சேர்க்க ரூ.8 கோடி மதிப்பிலான பெருந்திட்டத்தை (ஙஅநபஉத டகஅச) செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 சுற்றுலாத் துறை, உள்ளாட்சித் துறை, மின்சார வாரியம், பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த பெருந் திட்டத்திற்கு மத்திய சுற்றுலாத் துறையின் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

 தென் மேற்குப் பருவ மழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முடிய 3 மாதங்கள் அருவியில் கொட்டும் இந்த நீரில் குளித்து மகிழவும், சாரல் மழையில் நனைந்து உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறவும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

 2006-ல் திமுக ஆட்சிப் பொறுப்பெற்ற பின் குற்றாலம் மேம்பாட்டுக்காக தென்காசி எம்எல்ஏ வீ.கருப்பசாமி பாண்டியன் முயற்சியால் 2006-07 நிதியாண்டில் ரூ.82 லட்சமும், 2007-08 நிதியாண்டில் ரூ.88 லட்சமும் செலவிடப்பட்டுள்ளன.

 இந்த நிதியில் அருவிக்கரைக்குச் செல்லும் நடைபாதைகள் சீரமைப்பு, தெரு விளக்குகள், பூங்காக்கள் சீரமைப்பு, சாலை வசதி, உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதி என பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

 நிகழ் நிதியாண்டில் மாநில சுற்றுலாத் துறை பரிந்துரைப்படி மத்திய சுற்றுலாத்துறை ரூ.4.62 கோடி நிதியுதவி அளித்துள்ளது. அருவிக்கரை பகுதிகளில் கார் நிறுத்துமிடங்களை விரிவாக்கம் செய்தல், விஸ்வநாத ராவ் பூங்கா, நீச்சல் குளம் அருகே உள்ள பூங்கா ஆகியவற்றை மேம்படுத்துதல், மேலகரம் முதல் ஐந்தருவி வரை உயர்கோபுர மின்விளக்குகளை அமைத்தல், மேல வெண்ணமடை குளம் படகு குழாமில் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

 பெருந்திட்டம்: சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும், அருவிகள் மட்டுமன்றி இதர பொழுதுபோக்கு திட்டங்களை உள்ளடக்கிய "பெருந்திட்டம்' ஒன்றை நிறைவேற்றவும் சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

 இந்த பெருந்திட்டத்திற்கான நிதி மத்திய சுற்றுலாத் துறையிடம் கோரப்பட்டுள்ளது. தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 ""குற்றாலத்தை மேம்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாத் துறை மூலம் மட்டும் ரூ.1.70 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.4.62 கோடிக்கு பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன.

 இப்போது மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ள பெருந்திட்ட நிதி ரூ.8 கோடியில் ஐந்தருவி செல்லும் பாதையில் சுமார் 10 ஏக்கரில் "தீம் பார்க்', பராசக்தி மகளிர் கல்லூரி அருகே உள்ள பாசபதனேரி குளத்தில் படகு குழாம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

 குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் இந்த நிதியில் செய்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம்'' என்றார் கருப்பசாமி பாண்டியன்.

 ரூ. 87 லட்சம் நிதி ஒதுக்கீடு: மேலும் மேலகரம், இலஞ்சி ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநில சுற்றுலாத் துறை ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

 இந்த திட்டங்கள் அனைத்தும் முடிவடைந்தால் இயற்கை அளித்த குற்றாலத்தின் அழகுக்கு மேலும் அழகு சேரும் என்பது திண்ணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com