திருநெல்வேலி, ஆக. 5: இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், தேர்தல் பணியில் திமுக காட்டி வரும் தீவிரம், எதிரி இல்லாத போர்க்களத்தில் தன்னந்தனியே நின்று வாளை சுழற்றும் காட்சி போலத் தெரிகிறது.
கம்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக போன்ற கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்திருந்தாலும் "சர்வ பலமும்' படைத்த ஆளும் திமுகவுக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாது என்பது வாக்காளர்களுக்கு மட்டுமன்றி, அந்த கட்சிகளுக்கும் தெரியும். எனவே இந்த இடைத்தேர்தல் எதிரி இல்லாத போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் இம் மாதம் 18 ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர் ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
திருமங்கலத்தில் பெற்ற அனுபவத்தைக் கூறி அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ளது. அதிமுக அடியொற்றி அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக, மதிமுகவும் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. எனினும், கம்யூனிஸ்ட் கட்சிகள் களம் கண்டுள்ளன.
2006-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் இதுவரை நடந்துள்ள 3 (மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருமங்கலம்) இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. இத் தொகுதிகளில் நேரடி களம் கண்ட அதிமுக தோல்வியைத் தழுவியது. எனினும், திருமங்கலம் அனுபவத்தை அதிமுகவால் ஜீரணிக்க முடியவில்லை.
அழகிரிக்கு பரிசு:கடந்த 3 இடைத்தேர்தல்களையும் முன்னின்று நடத்தியவர் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க. அழகிரி. அதற்கு பரிசாக அவருக்கு திமுக தென் மண்டல அமைப்புச் செயலர் பதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் மத்திய அமைச்சராகவும் ஆகியுள்ளார்.
கட்சியிலோ, அரசாங்கத்திலோ அதிகாரப்பூர்வ அதிகாரம் எதுவும் இல்லாத அழகிரி 3 தொகுதிகளிலும் வெற்றி கண்டார். இப்போது அவ்விரண்டிலும் அதிகாரம் பெற்றவராக 5 தொகுதிகளின் இடைத்தேர்தலை எதிர்கொள்கிறார்.
கடந்த இடைத்தேர்தல்களில் பலமிக்க எதிரியான அதிமுகவை எதிர்கொண்டு வெற்றி பெற்றதில் அழகிரிக்கு ஒரு சுவாரசியம் இருந்திருக்கும். ஆனால் இந்த இடைத்தேர்தலில் அதிமுக இல்லாதது அவருக்கு ஒரு வகையில் ஏமாற்றமே. அதனால் வெற்றி உறுதி என திமுகவினர் எண்ணிக் கொண்டிருந்தாலும் அதற்காக அழகிரியும், கட்சியினரும் "சும்மா' இருந்துவிடவில்லை.
திருமங்கலம் "பார்முலா': ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டாலும், "திருமங்கலம் பார்முலா'வுடன் களத்தில் புகுந்துள்ள திமுகவினர் அனைத்து ஆயத்தப் பணிகளையும் தொடங்கி விட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொகுதிக்கு வந்த அழகிரி, செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி, திருமங்கலத்தைவிட கூடுதலாக ஆயிரம் வாக்குகள் பெற்று அதாவது 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கட்சியினருக்கு கட்டளையிட்டு அதற்கான வழிமுறைகளையும் கூறிச் சென்றுள்ளார். அந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலுவும் கலந்து கொண்டார்.
""அழகிரின் பேச்சில் இருந்து அவரது "செயல் திட்டம்' புரிந்துவிட்டது; தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா? என்பது சந்தேகம்தான்'' என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு. ஆனால் அதைப் பற்றியெல்லாம் திமுகவினர் கவலைப்பட்டவில்லை. அவர்கள் காரியத்தில் கண்ணாக இருக்கின்றனர்.
துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும் கடந்த இரண்டு நாள்களாக காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரம் செய்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி உள்ள தூத்துக்குடி மாவட்டம் மட்டுமன்றி, சுற்றியுள்ள திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் ஒன்றியங்கள் வீதம் பிரித்து கொடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் முடியும் வரை அவர்கள் தொகுதியிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது அழகிரியின் கட்டளை.
கம்யூ., தேமுதிக, பாஜக பிரசாரம்: காங்கிரûஸ எதிர்த்துப் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வழக்கம் போல ஆடம்பரமற்ற பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தேமுதிக, பாஜகவின் தொண்டர்கள் சற்று சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர். அதெல்லாம் வாக்காளர்களிடம் எவ்வளவு தூரம் எடுபடும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இம் மாதம் 7, 8-லும், காங்கிரஸ், பாஜக தலைவர்கள் அடுத்த வாரத்திலும் பிரசாரம் செய்ய உள்ளனர். என்னதான் இவர்கள் சுறுசுறுப்பு காட்டினாலும் அதிமுக களத்தில் இல்லாத குறை பளிச்சென தெரியத்தான் செய்கிறது என்கின்றனர் வாக்காளர்கள்.
அதிமுக போட்டியிட்டு இருந்தால் இதற்குள்ளாக "திருமங்கலம் திருவிழா' களைகட்டத் தொடங்கி இருக்கும். அதிமுக இல்லாததால் எதிரி இல்லாத போர்க்களத்தில் திமுக மட்டுமே நின்று கொண்டு வாள் வீசும் காட்சிதான் கண்ணில் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.