'கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத' மருத்துவக் காப்பீடு

  திருநெல்வேலி, செப். 24: "வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியல்' குழப்பத்தால் மத்திய அரசின் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயன்களை மக்கள் முழுமையாகப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  
Updated on
2 min read

  திருநெல்வேலி, செப். 24: "வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியல்' குழப்பத்தால் மத்திய அரசின் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயன்களை மக்கள் முழுமையாகப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மத்திய அரசு தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

 இத் தேசியத் திட்டம் தமிழ்நாட்டில் முன்னோடியாக காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. இதன் வெற்றியைப் பொருத்து பிற மாவட்டங்களுக்கும் திட்டம் படிப்படியாக விரிவாக்கப்படும்.

 இத் திட்டத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பட்டியலிடப்பட்ட குடும்பத் தலைவர், தலைவி மற்றும் மூன்று குழந்தைகள் அடங்கிய 5 பேர் கொண்ட குடும்பங்கள் பயன்பெறலாம். பயனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்குமான காப்பீடு பிரிமீயத் தொகை ரூ456-ல் 75 சதவீதத்தை மத்திய அரசு செலுத்தும். எஞ்சிய தொகையில் ரூ.30-ஐ மட்டும் பதிவுக் கட்டணமாக பயனாளி செலுத்த வேண்டும். மீதித் தொகையை தமிழக அரசு செலுத்தும்.

 பயனாளியின் புகைப்படம் எடுக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படும். ஒரு குடும்பமானது ஆண்டுக்கு ரூ.30,000 வரை மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை பெறலாம். உள்நோயாளியாக சிசிச்சை பெற்றால் ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்றுவர செலவுக்கு ரூ.100 என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.1,000 வரை வழங்கப்படும்.

 தமிழக முதல்வரின் உயர் மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட 52 நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும். தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் காய்ச்சல், தலைவலி முதல் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெற முடியும்.

 காஞ்சிபுரத்திலும், திருநெல்வேலியிலும் 2002 ஆம் ஆண்டின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலின் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள சுமார் 2.40 லட்சம் குடும்பங்களில் சுமார் 60,000 குடும்பங்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

 திருநெல்வேலி மாவட்டத்திலும் மொத்தம் உள்ள சுமார் 2.40 லட்சம் குடும்பங்களில் இதுவரையில் சுமார் 81,000 குடும்பங்களுக்கு மட்டுமே அட்டை வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலால் இடையில் தடைப்பட்டிருந்த அட்டை வழங்கும் பணி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு வள்ளியூர் ஒன்றியம் மற்றும் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் மேலும் ஒரு மாதம் காலநீட்டிப்பு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அவ்வாறு அக்டோபர் மாத இறுதி வரையில் அடையாள அட்டை வழங்கினாலும் சுமார் 1.10 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே அட்டை வழங்க முடியும். இது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் 50 சதவீதத்திற்கும் குறைவு என்கின்றனர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள எம்.டி. இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர்.

 ஒரு குறிப்பிட்ட பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலின்படி புகைப்படம் எடுத்து அடையாள அட்டை வழங்கச் சென்றால் மற்றவர்கள் ஒன்று கூடி புகைப்படம் எடுக்கவிடாமல் தடுத்து வருகின்றனர். ஊரில் உள்ள எல்லோருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், இல்லையென்றால் ஒருவருக்கும் அட்டை வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வறியவர்களின் பெயர் இல்லாமல் வசதி படைத்தவர்கள் பெயரும் பட்டியலில் இருப்பதே இதற்குக் காரணம். இந்த புள்ளிவிவர குழப்பத்தால் செய்வதறியாது திகைத்து வருகின்றனர் காப்பீடு நிறுவன ஊழியர்கள்.

 இதனால் ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com