"தடம் மாறும்' அரசு போக்குவரத்துக் கழகம்!

திருநெல்வேலி, ஏப்.5: அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் யோகா மற்றும் மனஅழுத்த நீக்கப் பயிற்சிகள் தற்போது பலன்  கொடுக்கத் தொடங்கியுள்ளன.  திருநெல்வேலி மண்ட
Updated on
2 min read

திருநெல்வேலி, ஏப்.5: அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் யோகா மற்றும் மனஅழுத்த நீக்கப் பயிற்சிகள் தற்போது பலன்  கொடுக்கத் தொடங்கியுள்ளன.

 திருநெல்வேலி மண்டலத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் குறித்த புகார்களின்  எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதோடு போக்குவரத்துக் கழகத்தின் செயல்திறனும்  கூடியுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிர்வாக குறைபாடுகளால் நஷ்டம் ஏற்பட்டு  வருவதாக குற்றச்சாட்டு உண்டு. அதேவேளையில் ஊழியர்களின் பொறுப்பின்மை,  மோசமான செயல்பாடுகள் போன்றவையும் நஷ்டத்திற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

 அரசு போக்குவரத்துக் கழகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில்  ஊழியர்களுக்கு, குறிப்பாக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முறையான பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு யோகா மற்றும் மனஅழுத்த நீக்கப் பயிற்சிகளை அளிக்கும்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக அவர்களுக்கு  பணி மேம்பாட்டு ஆலோசனைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

 எரிபொருள் சிக்கனம், பயணிகளிடம் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள்,  பஸ்நிறுத்தங்களில் முறையாக பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குதல் போன்றவை அந்த ஆலோசனைகளில் அடங்கும்.

 திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி  மண்டலத்தில் இந்த திட்டம் கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்டது. இவ்விரு  மாவட்டங்களிலும் உள்ள 14 கிளைகளில் 871 பஸ்களில் பணியாற்றும் சுமார் 4,100  ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு இந்தப் பயிற்சி பல்வேறு கட்டங்களாக அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் சுழற்சி முறையில்  இந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டு வருகின்றனர். பயிற்சி கூடுதலாக  தேவைப்படுவோருக்கு மாதத்தில் 3 நாள்கள் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்த பயிற்சியின் பலனைக் கண்டறியும் வகையில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள்  மீது பொதுமக்கள் கூறும் புகார்களைப் பதிவு செய்து அவற்றின் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான கட்டுப்பாட்டு அறை 24 மணி  நேரமும் செயல்பட்டு வருகிறது.

 கடந்த ஜனவரி 13 முதல் செயல்படத் தொடங்கிய இந்த கட்டுப்பாட்டு அறைக்கு  (செல்போன் எண்: 94875 99080) அந்த மாதத்தில் 130 புகார்கள் வந்தன. பிப்ரவரியில் 160 புகார்கள் பதிவாகின.

இந்த புகார்களில் பெரும்பாலானவை பஸ் மெதுவாக  செல்லுதல், காலதாமதமாக வந்து சேருதல், கூடுதல் பயண நேரம், பஸ்நிறுத்தத்தில் நிற்காமல் செல்லுதல், ஊருக்குள் வராமல் பிரதான சாலையில் செல்லுதல், சில்லறைப்  பிரச்னை, பயணிகளை நடத்துநர்கள் அவதூறாகப் பேசுதல் போன்ற குற்றச்சாட்டுகளே  அதிகம் இருந்தன.

 இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் உடனுக்குடன்  அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருவதோடு, யோகா  மற்றும் மனஅழுத்த நீக்கப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன் பலன்  அடுத்த மாதமே தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் இந்த புகார்களின் எண்ணிக்கை  112ஆக குறைந்துள்ளது.

அதிலும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறைந்துள்ளதால் போக்குவரத்துக் கழகம் இனிமேல் வழக்கமான  "தடத்தில்' இருந்து மாறி நல்ல வழித்தடத்தில் இயங்க இந்த பயிற்சிகள் அடிகோலும்  என அதிகாரிகள் நம்புகின்றனர்.

 ""யோகா மற்றும் மன அழுத்த நீக்கப் பயிற்சியானது ஓட்டுநர்கள் மற்றும்  நடத்துநர்களுக்கு மட்டுமன்றி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும்கூட வழங்கப்பட்டு  வருகிறது. இதுவரையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களில் 50 சதவீதம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துக் கழகத்தின் ஒட்டுமொத்த செயல்திறனும் மேம்பட்டுள்ளது. டீசல் சிக்கனம், வருவாய் அதிகரிப்பு, ஓட்டுநர்கள் மற்றும்  நடத்துநர்களின் அணுகுமுறையில் மாற்றம் போன்ற நல்ல பலன்கள் கிடைத்துள்ளன.

கடந்த மாதங்களில் நாளொன்றுக்கு அதிகபட்சம் 10 புகார்கள் பதிவாகின. இப்போது  அது மூன்றில் ஒன்றாக குறைந்துள்ளது'' என்றார் பொதுமேலாளர் சு. முருகன்.

 2008-09ஆம் நிதியாண்டில் இந்த மண்டலத்தின் நஷ்டம் ரூ.45 கோடி. அந்த நஷ்டம்  இந்த ஆண்டு பிப்ரவரி வரையில் சுமார் ரூ.35 கோடியாக குறைந்துள்ளது. அதாவது  கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் ரூ.10 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

ஆனால், தற்போதைய டீசல் விலை உயர்வு எங்களுக்கு மேலும் பின்னடைவை  ஏற்படுத்தியுள்ளது'' என்றார் முருகன்.

 நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு அளித்து  வருவதாக அதிகாரிகள் கூறினாலும், அவர்களின் கருத்து சற்று மாறுபட்டதாகவே உள்ளது.

 யோகா பயிற்சி உடலுக்கு நல்லதுதான். ஆனால், போக்குவரத்து தொழிலாளர்களால்  அதை முறையாகச் செய்ய இயலாது. மன அழுத்தத்திற்கு நிர்வாகமே காரணம். டீசல்  சேமிப்பு, விடுப்பு போன்ற விஷயங்களில் தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்க  நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்றார்  மாவட்ட போக்குவரத்து தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ. சார்பு) பொதுச்செயலர் பி.  முத்துகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com