திருநெல்வேலி, டிச. 22: தூத்துக்குடி மாவட்டம், ஆதிநாதபுரத்தில் கட்டப்பட்டு வரும் சமத்துவபுர வீடுகள் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விலை பேசப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், வீடுகளை கட்டும் முன்பு பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளதால் வீடுகளின் தரத்தை கண்காணிப்பார் யாரும் இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
சாதி, மத பிணக்குகள் இல்லாமல் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக அரசு அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவபுரங்களை அமைத்து வருகிறது. அதில் 100 வீடுகள் கட்டப்பட்டு ஆதிதிராவிடர்களுக்கு 40 வீடுகளும், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 வீடுகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 வீடுகளும், மற்றவர்களுக்கு 10 வீடுகளும் ஒதுக்கப்படும். இதற்கான பயனாளிகளை முடிந்த வரையில் அந்தந்த கிராமங்களிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. சமத்துவபுரங்களில் மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை, நூலகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.
இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிகழ் நிதியாண்டில் 36 சமத்துவபுரங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு சமத்துவபுரமாக தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஆதிநாதபுரம் ஊராட்சியில் 100 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆதிநாதபுரத்தில் உள்ள மாட்டுத்தவணியில் 9.96 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த சமத்துவபுரத்தின் கட்டுமான பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. வீடுகள் அனைத்தும் ஓராண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு 2011 மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே பணிகளை முடித்து திறப்பு விழாவை நடத்திவிட வேண்டும் என ஆளுங்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த சமத்துவபுரம் கட்டப்பட்டு வரும் இடம் மாட்டுத்தாவணி இருந்த இடம் என்றும், அது ஊர் பொதுப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் என்பதால் அங்கு சமத்துவபுரம் கட்டக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும், சமத்துவபுரம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இப்போது, சமத்துவபுரத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் முன்பே விலை பேசப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
சமத்துவபுரத்தில் வீடுகளை பெற தகுதியான பயனாளிகளை, முடிந்தவரை சமத்துவபுரம் அமைக்கப்படும் கிராமத்திலே தேர்வு செய்யப்பட வேண்டும். அங்கு தேவையான எண்ணிக்கையில் பயனாளிகள் இல்லாவிட்டால் அருகாமையில் உள்ள கிராமங்களில் பயனாளிகளை தேர்வு செய்யலாம் என்பது விதிமுறை.
சமத்துவபுரத்தில் வீடுகளை கட்டுவதற்கு முன்பே பயனாளிகளை தேர்வு செய்து வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் பயனாளி தனது வீட்டுமனையை அறிந்து கொள்ள முடியும். வீடு கட்டும் ஆரம்ப நிலையிலேயே பயனாளியை அதில் ஈடுபடுத்த முடியும் என்றும் அரசின் வழிகாட்டு விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
வீடுகள் கட்டும் பணியை ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைத்தாலும் உரிமையாளர் அருகில் இருக்கும்போது பணிகள் தரமாக இருக்கும் என்பதற்காகவும், முறைகேடுகளைத் தடுக்கவும் அரசு இந்த விதிமுறையை உருவாக்கி உள்ளது.
ஆனால், ஆதிநாதபுரம் சமத்துவபுரத்தில் வீடுகளின் கட்டுமானப் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை திட்டத்தை செயல்படுத்தும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையினர் உறுதி செய்கின்றனர். இதனால் யாருக்கு எந்த வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரியாது. வீடுகளின் கட்டுமானமும் தரம் குறைந்ததாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. தரம் குறைந்த மணல், செங்கல் ஆகியவற்றோடு குறைந்த அளவு சிமென்ட் பயன்படுத்தப்பட்டு வருவதால் ஒரு சில ஆண்டுகளிலேயே வீடுகள் பழுதடையும் நிலை இருப்பதாக உள்ளூர் நபர்கள் கூறுகின்றனர்.
இந்த வீடுகளை கட்டும் பணிக்கான ஒப்பந்தக்காரர் தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்த என்.பி. அசோக் வர்த்தனன் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மாநில சமூக நலத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவனின் சகோதரரும், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலர் என். பெரியசாமியின் மகனும் ஆவார்.
இப்போது, சமத்துவபுரம் வீடுகள் கட்டி முடிக்கும் முன்பே விலை பேசப்பட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் அருகில் உள்ள கிராம மக்களை அணுகி ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் விலை பேசி வருவதாகவும், பணம் கொடுத்தவர்களுக்கே வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறி பண வசூலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீடு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அண்டை கிராம ஏழை மக்கள் இனிமேல் வீடு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற விரக்தி அடைந்துள்ளனர். எனவே, வீடுகள் விலை பேசப்படுவதை தடுத்து, தரமான முறையில் வீடுகளைக் கட்டி தகுதியான நபர்களுக்கு ஒதுக்கீடு செய்து திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.