அரசு திட்டங்களை பெறுவதில் சிக்கல்

திருநெல்வேலி, ஜூலை 3: தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தொகுதி மறுவரையறையால் சில பகுதிகளுக்கு அரசின் நலத் திட்டங்கள் கூடுதலாகவும், சில பகுதிகளுக்கு நலத் திட்டங்கள் கிடைப்பதில் குறைபாடும் ஏற்பட்டுள்ளது.  அர
Updated on
2 min read

திருநெல்வேலி, ஜூலை 3: தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தொகுதி மறுவரையறையால் சில பகுதிகளுக்கு அரசின் நலத் திட்டங்கள் கூடுதலாகவும், சில பகுதிகளுக்கு நலத் திட்டங்கள் கிடைப்பதில் குறைபாடும் ஏற்பட்டுள்ளது.

 அரசின் திட்டங்களைப் பெறுவதில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் இருப்பதால் இந்த குறைபாட்டை போக்க வழியின்றி தவித்து வருவதாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

 நாட்டில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக 2002-ம் ஆண்டு மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2001-ம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் சட்டப் பேரவைத் தொகுதிகளையும், மக்களவைத் தொகுதிகளையும் மறுவரையறை செய்து 2007-ம் ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை அமல்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்த பின்னர் 2008-ம் ஆண்டு தொகுதி மறுவரையறை அமலுக்கு வந்தது. இந்த மறுவரையறையால் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை மாறவில்லை. மாவட்ட அளவில் தொகுதிகளின் எண்ணிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டது. எனினும் பொதுமக்களுக்கு வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டு வருவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 11 சட்டப் பேரவைத் தொகுதிகளும், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளும் இருந்தன. தொகுதி மறுவரையறைக்கு பிறகு சேரன்மகாதேவி சட்டப் பேரவைத் தொகுதி நீக்கப்பட்டு 10 தொகுதிகளாக மாற்றி அமைக்கப்பட்டன. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை.

 சட்டப் பேரவைத் தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் முன்பு ஒரு தொகுதியில் இருந்த ஊராட்சி ஒன்றியமோ, பேரூராட்சியோ, நகராட்சியோ, கிராம ஊராட்சியோ தற்போது வேறு ஒரு தொகுதியின் கீழ் வருகிறது.

 பொதுவாக அந்தந்த தொகுதியின் எம்.எல்.ஏ.கள் தொடர்ந்து அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவே விரும்புவர். அதற்காக அவர்கள் வாக்கு வங்கியை கணக்கில் கொண்டு அரசு திட்டங்கள் மூலம் மேம்பாட்டு பணிகளைச் செய்வது உண்டு. அதிக வாக்குகள் இருக்கும் இடங்களுக்கும் கூடுதல் கவனம் செலுத்துவது வழக்கமான அணுகுமுறை.

 மறுவரையறை அமலுக்கு வந்த உடனே கடந்த 2 ஆண்டுகளாக அந்தந்த தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள், தங்களது தொகுதியில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளின் மீது கவனம் செலுத்துவதை குறைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டனர். சட்டப் பேரவை உறுப்பினரின் உள்ளூர் தொகுதி வளர்ச்சி நிதியை பிரிந்து சென்ற பகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்குவதில்லை என்றும், அரசின் திட்டப் பயன்களை பிரிந்து சென்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

 தொகுதி மறுவரையறைக்கு பிறகு வரும் 2011-ல் நடைபெற உள்ள முதலாவது சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், பழைய பகுதிகளை புறக்கணித்துவிட்டு, தொகுதியில் புதிதாக இணைந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். தொகுதி வளர்ச்சி நிதியை புதிய பகுதிகளுக்கு ஒதுக்க முடியாது என்பதால், இதர அரசு திட்டங்களை பெற்றுக் கொடுத்து மக்களை கவர்ந்து வருகின்றனர். ஆனால், அந்த வாய்ப்பு எல்லா பகுதி மக்களுக்கும் கிடைப்பதில்லை என்பதுதான் புகார்.

 உதாரணமாக, ஆலங்குளம் தொகுதியில் இருந்த மானூர் ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சிகள் மறுவரையறையில் திருநெல்வேலி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக ஆலங்குளம் எம்.எல்.ஏ.வின் (மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பூங்கோதை) தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் குறிப்பிடத்தக்க பணிகள் எதுவும் நடைபெறவில்லை என அப்பகுதி திமுகவினர் கூறுகின்றனர்.

 இதேபோல, ஆலங்குளம் தொகுதியில் இருந்த வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தற்போது தென்காசி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 முன்பு பாளையங்கோட்டை தொகுதியில் இருந்த பாளையங்கோட்டை ஒன்றிய பகுதிகள் மறுசீரமைப்பில் நான்குனேரி தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. முன்பு அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்த கடையம் ஒன்றிய பகுதிகள் இப்போது ஆலங்குளம் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. இப்படி அனைத்துத் தொகுதிகளிலும் பிரிந்து சென்றுள்ள பகுதிகளுக்கு அந்தந்த தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்குவதை முற்றிலும் நிறுத்திவிட்டனர் அல்லது பெருமளவு குறைத்துக் கொண்டனர் என்பதுதான் குற்றச்சாட்டு. ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு.

 முன்பு தென்காசி தொகுதியில் இருந்த செங்கோட்டை நகராட்சியும், ஒன்றியமும் தற்போது கடையநல்லூர் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தென்காசி எம்.எல்.ஏ. வீ.கருப்பசாமி பாண்டியன் செங்கோட்டை பகுதிக்கு இந்த ஆண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியை அளித்துள்ளார்.

 அதேவேளையில், மறுவரையறையில் நீக்கப்பட்டுள்ள சேரன்மகாதேவி தொகுதி மக்களுக்கு அதிர்ஷ்டம். தற்போதைய அந்த தொகுதி எம்.எல்.ஏ.வின் உள்ளூர் வளர்ச்சி நிதி மற்றும் அரசு திட்ட உதவிகளுடன், மறுவரையறையில் அந்த தொகுதி இணைக்கப்பட்டுள்ள ஆலங்குளம் தொகுதியின் எம்.எல்.ஏ.வான அமைச்சர் பூங்கோதை "தொலைநோக்கு பார்வை'யுடன் மக்களுக்கு அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் அளித்து அவர்களது மனங்களை கவர்ந்து வருவதாகவும் திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதேபோல், எல்லா எம்.எல்.ஏ.க்களும் ஆர்வம் காட்டாததால் பிரித்து ஒட்ட வைக்கப்பட்ட சில புதிய பகுதிகளின் மக்கள் கேட்பாரற்ற நிலையில் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் இதேநிலைதான் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com