"மணிமேகலை விருது பெற மகளிர் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்'

தூத்துக்குடி, ஜன. 8:    சிறந்த மகளிர் குழுவிற்கான மணிமேகலை விருது பெற, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் இம் மாதம் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
Updated on
1 min read

தூத்துக்குடி, ஜன. 8:    சிறந்த மகளிர் குழுவிற்கான மணிமேகலை விருது பெற, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் இம் மாதம் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சி.நா. மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  சிறப்பாகச் செயல்படும் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் 2010-11-ம் ஆண்டுக்கான மணிமேகலை விருது தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

  மாநில அளவில் ஐந்து சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்குத் தலா ரூ. 3 லட்சம், 10 சிறந்த சுய உதவிக்குழுக்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் மற்றும் மணிமேகலை விருதும் வழங்கப்பட உள்ளது.

  மாவட்ட அளவில் ஒரு சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ. 1 லட்சமும், மூன்று சிறந்த சுய உதவிக்குழுக்களுக்குத் தலா ரூ. 25 ஆயிரமும், மணிமேகலை விருதும் வழங்கப்படுகிறது.

  வட்டார அளவில் சிறப்பாகச் செயல்படும் ஒரு சுய உதவிக்குழுவுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

   இந்த விருது பெற, 1.7.2010 தேதியில் குழு தொடங்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். இரண்டாம் தரம் பிரித்தலில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

1.7.2010-க்கு முன்பு குழு நிர்வாகிகள் (ஊக்குநர், பிரதிநிதி) குறைந்தபட்சம் ஒரு முறையாவது மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  வங்கி, நிதி நிறுவனங்களிடம் இருந்து குறைந்தபட்சம் மூன்று முறை கடன் பெற்று தவணை தவறாது செலுத்தியிருக்க வேண்டும்.

  சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு விருது பெற 1.7.2010 தேதியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பகுதியில் உள்ள அனைத்து சுய உதவிக்குழுக்களும் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினராகப் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

  1.7.2008 முதல் 30.6.2010 வரையிலான காலங்களில் குறைந்தபட்சம் 20 கூட்டங்களை ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு நடத்தியிருக்க வேண்டும். சிறந்த ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மாநில மற்றும் மாவட்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும்.  எனவே, விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, இம் மாதம் 14-ம் தேதிக்குள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்

ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com