திருநெல்வேலி, மார்ச் 11: திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கோ அல்லது தவறுகளை திருத்துவதற்கோ படாதபாடு பட வேண்டியதாக இருக்கிறது. அதுமட்டுமன்றி அட்டைகள் தரம் குறைந்தவைகளாக இருப்பதோடு தவறுகள் நிறைந்தவைகளாகவும் இருப்பதாக வாக்காளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
புதிய வாக்காளர்களுக்கு மட்டுமின்றி ஏற்கெனவே அடையாள அட்டை பெற்றவர்களின் அட்டைகளில் உள்ள பிழைகளைத் திருத்துதல், அட்டை தொலைந்திருந்தால் அல்லது பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்தால் அதற்குப் பதிலாக புதிய அட்டை வழங்குதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும். அத்துடன் அவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையும் வழங்கப்படும்.
பழைய அட்டை தொலைந்திருந்தால் அதற்குப் பதிலாக புதிய அட்டை பெறுவதற்கு படிவம் 001சி-யும், அட்டையில் உள்ள பிழைகளைத் திருத்த வேண்டும் என்றால் அதற்கு படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இவையெல்லாம் எளிதான காரியமாக தெரிந்தாலும் நடைமுறையில் ஒவ்வொரு வாக்காளரும் அடையாள அட்டையைப் பெறுவதற்கும், அதில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்வதற்கும் படாதபாடு பட வேண்டியதாகி இருக்கிறது என வாக்காளர்கள் புலம்புகின்றனர்.
திருநெல்வேலியில் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக விண்ணப்பங்களை அளிக்கும் இடங்களில் உள்ள ஊழியர்கள் குறிப்பிட்ட ஒரு படிவத்தை அளிக்கின்றனர். உதாரணமாக, அடையாள அட்டையில் உள்ள பிழைகளைத் திருத்த வேண்டும் அல்லது புகைப்படத்தை மாற்ற வேண்டும் எனக் கூறினால் அதற்கு படிவம் 8 போதுமானது எனக் கூறி விண்ணப்பத்தை கொடுக்கின்றனர். வாக்காளர் அதை பூர்த்தி செய்து பின்னர் விண்ணப்பங்களை பெறும் நபரிடம் அளித்தால் அதை அவர் ஏற்க மறுத்து, குறிப்பிட்ட அந்த பணிகளை மேற்கொள்ள 001சி படிவத்தைதான் கொடுக்க வேண்டும் என்கிறார்.
அதுமட்டுமல்ல, ஒரு புகைப்படம் போதுமானது, அதை விண்ணப்பத்தில் ஒட்டி விடுங்கள் என்கிறார் ஒருவர். அவ்வாறு செய்து விண்ணப்பத்தை எடுத்துச் சென்றால், ""வேறு ஒரு புகைப்படத்தை ஒரு வெள்ளைத்தாளில் தனியாக ஒட்டி உங்கள் முகவரியை தெளிவாக எழுதி அதனுடன் இணைத்து கொண்டு வாருங்கள்'' என்கிறார். இப்படி ஒவ்வொருவரும் "கட்டளை'களை இடுவதால் வாக்காளர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
ஒருவர் இத்தனை சிரமங்களையும் வெற்றிகரமாக சமாளித்து விண்ணப்பத்தை அளித்து விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் குறிப்பிட்ட நாளில் அடையாள அட்டை கையில் கிடைக்கும். அல்லது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு, "ஹோலோ கிராம்' தட்டுப்பாடு எனக் கூறி அட்டை கிடைக்காது. அப்படியும் அட்டை கிடைத்து அதை உற்றுப் பார்த்தால் சில நேரங்களில் அதிர்ச்சிதான் ஏற்படும். அட்டையில் பெயரில் தொடங்கி பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தவறுகள் இடம்பெற்று விடுகின்றன. அதை திருத்த மீண்டும் அவர் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலை உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியை தேர்தல் ஆணையத்தில் குத்தகை எடுத்துள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் எவ்வித சிரத்தையும் இல்லாமல் மனம்போன போக்கில் அட்டையை தயாரித்து வழங்கி வருவது அதைப் பார்த்தாலே தெரிகிறது. இந்த அட்டை சமூகத்தில் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தும் ஓர் ஆவணம் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.
""தேர்தல் நெருங்கி விட்டதால் அவசர அவசரமாக பணிகளை செய்ய வேண்டி இருப்பதால் குறைகள் ஏற்பட்டு விடுகின்றன. அதை படிப்படியாக சரி செய்து வருகிறோம்'' என்கின்றனர் தேர்தல் பிரிவு அலுவலர்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள சுமார் 19.42 லட்சம் வாக்காளர்களில் 97 சதவீதம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் எத்தனை சதவீதம் தவறு இல்லாத அட்டைகளாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நூறு சதவீதம் அடையாள அட்டையுடன் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையத்திற்கு, இந்த குறைபாடுகள் பெரிய முட்டுக்கட்டையாகவே இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.