தென் மாவட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மந்தம்

திருநெல்வேலி, மே 2: தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் உள்ள சுயநிதி பொறியியல்  கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மந
Updated on
2 min read

திருநெல்வேலி, மே 2: தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் உள்ள சுயநிதி பொறியியல்  கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மந்த நிலையில் உள்ளது.

 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகே இங்கு மாணவர் சேர்க்கை சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையில் சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.

 ஒவ்வோர் ஆண்டும் பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த சில நாள்களிலேயே தனியார்  சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடங்களைப் படிக்க  விரும்புவோர் அந்தந்தக் கல்லூரிகளில் இடத்தைப் பெறுவதில் முனைப்பு  காட்டுவார்கள். அதிலும், குறிப்பாக பெண்களின் பெற்றோர்கள் உள்ளூரில், வீட்டுக்கு  அருகில் உள்ள பொறியியல் கல்லூரியில் இடம்பிடிப்பதில் தீவிரம் காட்டுவார்கள்.

 இந்த ஆண்டு தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி,  கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக  ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு மாணவர்கள் இதுவரை பெரிய அளவில் ஆர்வம்  காட்டவில்லை என கல்லூரி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 வட மாவட்டங்களில் குறிப்பாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும், கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும்  மாணவர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதிலும்,  சென்னையில் உள்ள பழமையான சில கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் "கோர் குரூப்' பாடப் பிரிவுகளான சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்  கம்யூனிகேஷன்ஸ் பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி  வருவதால் அந்த இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. "கோர்  குரூப்' கிடைக்காத மாணவர்கள் அடுத்த நிலையில் வேலைவாய்ப்பு உள்ள பாடப்  பிரிவுகளில் சேருவதில் ஆர்வம்காட்டி வருவதால் அந்த இடங்களும் வேகமாக நிரம்பி  வருவதாக பொறியியல் கல்லூரி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 தென் மாவட்டங்களில் நிலைமை தலைகீழாக உள்ளது. இங்குள்ள பல கல்லூரிகளில்  இதுவரை மாணவர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என கல்லூரிகளின்  நிர்வாகிகள் கூறுகின்றனர். மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கல்லூரிகளுக்கு  வந்து வளாகத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு விவரங்களை கேட்டுச் செல்கிறார்களே தவிர,  சேர்க்கைக்கான உறுதி எதையும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால்  கல்லூரி நிர்வாகிகள் சோர்வடைந்துள்ளனர். ஆதலால் கல்லூரிகளின் விரிவாக்கப்  பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து முடிவு செய்வதிலும் அவர்கள் ஆர்வம்  காட்டாமல் உள்ளனர்.

 தேர்தல் முடிவுகள் காலதாமதமாவதுகூட ஒரு வகையில் மாணவர் சேர்க்கையைப்  பாதிக்கிறது என்பது சில கல்லூரி நிர்வாகிகளின் கருத்து. பொறியியல் கல்லூரிகளில்  நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தில் இந்த ஆண்டு இதுவரை மாற்றம் இல்லை.  புதிய ஆட்சி வந்தவுடன் கட்டண மாற்றம் ஏதேனும் இருக்குமா, முதல் தலைமுறை  மாணவர்களுக்கான கட்டண சலுகையில் கூடுதல் சலுகை இருக்குமா என்ற  எதிர்பார்ப்புடன் புதிய சலுகைகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டால், அதைப்  பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் தவறவிட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில்  சில பெற்றோர்கள் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போதே கல்லூரிகளில்  இடத்தைப் பிடித்து கட்டணத்தைச் செலுத்திவிட்டால் பிறகு புதிய அரசு ஏதேனும்  சலுகை அறிவித்தால் சுயநிதிக் கல்லூரிகளில் ஒருமுறை செலுத்திய கட்டணத்தை   திரும்பப் பெற முடியாது என்பதுகூட காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 தமிழ்நாட்டில் இப்போதுள்ள 486 பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலான  கல்லூரிகளில் பி.இ. படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தக் கோரி  விண்ணப்பித்துள்ளனர். மேலும், 40 புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கவும்  விண்ணப்பித்துள்ளனர். எனவே, இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 2.10 லட்சம்  இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 1.9 லட்சம்  இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. ஆதலால் இந்த  ஆண்டு கூடுதலாக அரசு ஒதுக்கீட்டுக்கு 20 ஆயிரம் இடங்கள் இருக்கும்போது  கலந்தாய்வு மூலமே உள்ளூரில் உள்ள நல்ல கல்லூரிகளில் விரும்பிய இடங்களைப்  பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாலும் பெற்றோர்களும், மாணவர்களும் அதிக  கட்டணம் மற்றும் நன்கொடை கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெறுவதில்  ஆர்வம் காட்டாமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக, மொத்தத்தில் மாணவர் சேர்க்கை மந்தமாக உள்ளது.

 இதுகுறித்து திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர்  எம். ராஜாராம் கூறியதாவது: தென் மாவட்ட மாணவர்களும் சரி, பெற்றோர்களும்  சரி, எப்போதுமே விழிப்புடன் செயல்படுவார்கள். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு  சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் கூடுதல் இடங்கள் உள்ளன.  ஆதலால் கலந்தாய்வு மூலம் தகுதியான மாணவர்களுக்கு, தகுதியான கல்லூரிகளில்  இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அதற்காக அவர்கள் காத்திருக்கலாம். பிளஸ் 2  தேர்வு முடிவுகள் வெளியானவுடன் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்  வேகமாக நிரம்ப வாய்ப்பு உள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com