மாணவர்களுக்கு நலத் திட்டங்கள் சென்றடைய பள்ளிகளில் புதிய பணியிடம் உருவாக்கப்படுமா?

கோவில்பட்டி, நவ. 29: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகள் எளிதாகக் கிடைக்க தனியாக பணியிடம் ஒன்றை உருவாக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்
Updated on
1 min read

கோவில்பட்டி, நவ. 29: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகள் எளிதாகக் கிடைக்க தனியாக பணியிடம் ஒன்றை உருவாக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

       பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.     இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் இடைநின்றல் இல்லாமல் தொடர்ந்து படிக்க மாணவர்களையும், பெற்றோர்களையும் அரசு ஊக்கப்படுத்துகிறது. கிராமப்புற ஏழை மாணவர்கள், பின்தங்கிய மாணவர்கள் இதனால் பயனடைகின்றனர். பெண் கல்வியும் ஊக்குவிக்கப்படுகிறது.

  மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச மிதிவண்டி, இலவச மடிக்கணினி, இலவச பாடப்புத்தகங்கள், சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகை, சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை, பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு உதவித்தொகை, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநின்றலைத் தவிர்க்கும் உதவித்தொகை உள்ளிட்டவை மற்றும் அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பள்ளி மூலமாகவே பதிதல் பணி உள்ளிட்டவை பள்ளித் தலைமையாசிரியரிடமே ஒப்படைக்கப்படுகிறது.

   மேலும், அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் பள்ளிகளில் கட்டப்படும் கட்டடங்கள் பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படாமல், தலைமையாசிரியரே பொறுப்பேற்று கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

   இதுதவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளும் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

    இது தொடர்பாக, கல்வி அலுவலர்கள் கூட்டும் கூட்டத்துக்கும் தலைமையாசிரியர்கள் அடிக்கடி செல்ல வேண்டியுள்ளது.

    இந்த நலத் திட்டங்களை மற்ற ஆசிரியர்களின் உதவி இல்லாமல், தலைமையாசிரியர் ஒருவரே தனியாக செயல்படுத்த இயலாது. இதனால் கற்றல், கற்பித்தல் பணிக்கு இடையூறும், தொய்வும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    இப்பணிகளால் பலரும் தலைமையாசிரியர் பதவி உயர்வு வேண்டாம் என்றும், பல தலைமையாசிரியர்கள் விருப்ப ஓய்வு எடுப்பதும் இருந்து வருவதாக ஆசிரியர்களிடையே கூறப்படுகிறது.

    மேலும், மாணவர்களின் தேர்ச்சி, அதிக மதிப்பெண் பெற வழிகாட்டுதல், கல்விக்கு ஊக்குவிக்கும் மாலைநேரப் படிப்பு, கல்விக்குத் துணைப் பணிகளான அறிவியல் மன்றம், இலக்கிய மன்றம், கணித மன்றம், சாரணர் இயக்கம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டுநலப் பணித் திட்டம், தேசிய பசுமைப் படை, சுற்றுச்சூழல் மன்றம், செஞ்சுருள் சங்கம், தேசிய மாணவர் படை போன்ற பணிகளில் முழுக் கவனம் செலுத்தும் வகையில், பள்ளிகளில் சத்துணவுக்கு என தனியாக அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இருப்பதுபோல, மாணவர்களின் நலத் திட்டங்களைச் செயல்படுத்த தனியாக பணியிடம் உருவாக்கிட வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்கத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com